Published : 28 Jan 2023 03:57 AM
Last Updated : 28 Jan 2023 03:57 AM

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க 4 நாட்களே அவகாசம்

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்னும் 4 நாட்களே அவகாசம் உள்ளதால், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவ.15-ம் தேதி தொடங்கியது.

டிச.31-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் இணைக்காததால், வரும் 31-ம் தேதி வரை கெடு நீட்டிக்கப்பட்டது. இதற்காக, மாநிலம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை 2.25 கோடி பேர் மட்டுமே இணைத்துள்ளனர். இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இணைக்காதவர்கள் மின்கட்டணம் செலுத்த முடியாததோடு, அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநில செயலாளர் எஸ்.கண்ணன் கூறும்போது, ``இன்னும் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மேலும், நுகர்வோரின் தரவுகளை முறையாக சேமித்து வைக்கும் அளவுக்கு மின்வாரியத்தில் இணையதள கட்டமைப்பு வசதி இல்லை. விடுமுறை நாட்களிலும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால், ஊழியர்களுக்கு பணிச் சுமை அதிகரித்துள்ளதோடு, மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்'' என்றனர். ‘‘அரசிடம் ஆலோசித்து இதற்கு தீர்வு காணப்படும்'' என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x