Published : 28 Jan 2023 06:12 AM
Last Updated : 28 Jan 2023 06:12 AM
புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக 30-ம் தேதி மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, தற்போது தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான வைரமுத்து ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், விசாரணை முடிவடைந்து, உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான திருமகன் ஈவெராமறைவையடுத்து பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் இபிஎஸ்மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வின் முன்பாக இபிஎஸ் தரப்பில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். ஆகவே எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி என்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க மறுக்கிறது. எனவே இதுதொடர்பாக தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என முறையீடு செய்தார்.
அப்போது நீதிபதிகள், ஈரோடுகிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியைக் கேட்டறிந்தனர். பின்னர், இதுதொடர்பாக, வரும்30-ம் தேதி போதிய விவரங்களுடன் மனுவாக தாக்கல் செய்து, அன்றைய தினம் மீண்டும் முறையீடு செய்யும்படி தெரிவி்த்தனர்.
பொதுக்குழு தீர்ப்பு வர வாய்ப்பு
மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதிக்கு முன்பாக ஓபிஎஸ் தொடர்ந்துள்ள பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளிக்க முடியுமா என்பதை பார்க்கிறோம். ஒருவேளை தீர்ப்பு தாமதமாகும் பட்சத்தில் இபிஎஸ் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள இந்த முறையீடு பரிசீலிக்கப்படும் எனவும் நீதிபதி கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில்தொடரப்பட்டுள்ள வழக்கில், ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு முன்பாக தீர்ப்பு வெளி யாகலாம் என்பதை நீதிபதிகள் சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.
விரைவில் வேட்பாளர் அறிவிப்பு
இதற்கிடையே, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கடந்த 4 நாட்களாக விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. அதிமுக ஒரு ஜனநாயகம் மலர்ந்த கட்சி. கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூடி விரைவில் வேட்பாளரை அறிவிப்பார்கள்.
இடைத்தேர்தலில் படிவம் ஏ,பி ஆகியவற்றில் கையெழுத்திடும் அதிகாரம் எங்களுக்குதான் உண்டு. இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் வரும்.
சட்டம் ஒழுங்கு சீரழிந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை செயல்படுத்தவில்லை. இதன் காரணமாக திமுக மீது 234 தொகுதிகளிலும் அதிருப்தி உள்ளது. இவை எல்லாம் தேர்தலில் எதிரொலிக்கும்.
கட்சியில் பிளவு இல்லை
இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதன் மூலமாக, ஒரு பாடத்தை திமுக அரசுக்கு மக்கள் புகட்ட இருக்கிறார்கள். மக்கள் துணையுடன் மாபெரும் வெற்றியை பெறுவோம். கட்சிக்குள் பிரிவோ, பிளவோ இல்லை. பழனிசாமி தலைமையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT