Published : 28 Jan 2023 06:49 AM
Last Updated : 28 Jan 2023 06:49 AM
சென்னை: திரைப்பட சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்தெரிவித்துள்ளனர். ஜூடோ ரத்தினம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைத்துறையினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியவர் ‘கலைமாமணி’ ஜூடோ ரத்தினம் (93). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 26-ம் தேதி அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காலமானார்.
அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஸ்டாலின்: பழம்பெரும் சண்டை பயிற்சியாளரான ஜூடோ ரத்தினம், வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார் என்றசெய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 1,200-க்கும் மேற்பட்டதிரைப்படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஜூடோ ரத்தினம், பொதுவுடைமை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சிறு வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஜூடோரத்தினம், தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக பெருமிதத்தோடு அறிமுகம் செய்து கொள்ளும் பண்பாளர். அவரது மறைவு, தமிழ் திரையுலகத்துக்கும், சண்டை பயிற்சி கலைஞர்களுக்கும், பொதுவுடமை இயக்கத்துக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: கடுமையான உழைப்பை கோரும் சண்டை பயிற்சியை உடல் வருத்தமாய் கொள்ளாமல் ஆரோக்கியத்துக்கான வழியாக்கிக் கொண்டவர் ஜூடோ ரத்தினம். அவருக்கு எனது அஞ்சலி. இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
இதற்கிடையே, மறைந்த ஜூடோரத்தினம் உடல் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, வடபழனியில் உள்ள சண்டை பயிற்சிகலைஞர்கள் சங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், சண்டை பயிற்சி இயக்குநர் பீட்டர்ஹெயின், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியபோது, ‘‘சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்தினம். கதாநாயகர்களின் பாதுகாப்பை போலவே, உதவியாளர்களின் பாதுகாப்பையும் எப்போதும் கவனத்தில் கொண்டு சண்டை பயிற்சி மேற்கொள்வார். ‘முரட்டுக்காளை’ படத்தில் அவர் அமைத்த ரயில்சண்டை காட்சியை யாராலும் மறக்க முடியாது. 93 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்’’ என்றார்.
இன்று இறுதிச் சடங்கு
திரையுலகினர், பொதுமக்க ளின் அஞ்சலிக்கு பிறகு, ஜூடோரத்தினம் உடல் நேற்று மீண்டும் அவரது சொந்த ஊரான குடியாத் தத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று (ஜன.28) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT