Published : 28 Jan 2023 07:32 AM
Last Updated : 28 Jan 2023 07:32 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஊராட்சி தலைவர் கொடியேற்ற அனுமதிக்கப்படவில்லை. தான் பட்டியலினத்தைச் சேர்ந்த சேர்ந்த பெண் என்பதால் தன்னை கொடியேற்ற அனுமதிக்காமல் சிலர் தடுத்ததாக அந்த ஊராட்சி தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி விளக்கம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த பாலுச்செட்டி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். இந்தச் சூழ்நிலையில் நேற்று முன்தினம் குடியரசு தின விழாவில் பங்கேற்க திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றுள்ளார். அவர் தேசியக் கொடியை ஏற்றச் சென்றபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் சிலர் இவரை தடுத்துள்ளனர். இதனால் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய ஊராட்சி தலைவர் சுகுணா இது தொடர்பாக பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தன்னை தேசியக் கொடியேற்றவிடாமல் தடுத்ததாக பாலச்சந்தர், செல்வம் ஆகிய இருவர் மீது புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊராட்சி தலைவர் சுகுணாவிடம் கேட்டபோது, “என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் ஆதரவாளர்கள், என்னை பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். ஏற்கெனவே இது தொடர்பாக நான் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் கொடுத்து அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில் பள்ளியில் என்னை தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் திமுகவைச் சேர்ந்த பாலச்சந்தர், செல்வம் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளேன். தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மீது பள்ளிக் கல்வித்துறையில் புகார் கொடுக்க உள்ளேன்” என்றார்.
இது குறித்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரியிடம் கேட்டபோது, “நான் எனது விளக்கத்தை ஆட்சியரிடம் தெரிவித்துவிட்டேன்” என்றார்.
இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வியிடம் கேட்டபோது, “ஊராட்சி தலைவர் ஆரம்பப் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்ற வரும்போது ஏதோ முன் விரோதத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சுகுணா உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேறிவிட்டார். இதனைத் தொடர்ந்தே வேறு நபரை வைத்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்” என்றார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கூறியதாவது: ஊராட்சித் தலைவருக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில்தான் கொடியேற்ற முழு அதிகாரம் உள்ளது. பள்ளி என்பது முழுக்க முழுக்க அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் உள்ள இடம். அவர் தேசியக் கொடியை ஏற்றுவார். அவர் இல்லையென்றால் வேறு சிலர் ஏற்றலாம்.
தொடர்புடைய ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக் கொடி ஏற்றியுள்ளார். ஒரு கிராமத்தில் பல இடங்களில் விழா நடைபெற்றால் அனைத்து இடத்திலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது. பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT