Last Updated : 28 Jan, 2023 06:36 AM

 

Published : 28 Jan 2023 06:36 AM
Last Updated : 28 Jan 2023 06:36 AM

வாணியம்பாடி - ஊத்தங்கரை இடையே ஆமை வேகத்தில் 4 வழிச்சாலை பணிகள்: பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதி

ஜோலார்பேட்டை அருகே ஆமை வேகத்தில் நடந்து வரும் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள். படம்: ந.சரவணன்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட எல்லை வரையிலான சாலைகள் குண்டும், குழியுமாக இருந்ததை தொடர்ந்து, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த அதிமுக ஆட்சியில் வாணியம்பாடி செட்டியப்பனூரில் இருந்து சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டினம் வரை கிட்டத்தட்ட 130 கி.மீ., தொலைவுள்ள குறுகிய சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இதைத்தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கின. 130 கி.மீ., தொலைவுள்ள நான்கு வழிச்சாலை 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதி யாக, வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வரை சுமார் 55 கி.மீ., தொலைவுள்ள சாலை விரிவாக்க பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரையிலான சாலை அமைக்கும் பணிகளை வாணியம்பாடி நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வரு கின்றனர். 55 கி.மீ., தொலைவுள்ள சாலை அமைக்கும் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் நிறைவடையும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 3 அல்லது 4 மாதங்களுக்கு பணிகள் நீளும் என தெரிகிறது. பல்வேறு காரணங்களால் சாலை அமைக்கும் பணிகள் நீண்டு கொண்டே செல்வதாக நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வாணியம்பாடி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதாவிடம் கேட்டபோது, ‘‘வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வரை இருந்த இரு வழிச்சாலை, நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் பிப்ரவரி மாதம் நிறைவடைய திட்டமிடப்பட்டது.

ஆனால், ஜோலார்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை அகற்றுவதில் ஒரு சில சிக்கல் நீடித்ததால் சாலை அமைக்கும் பணிகள் சற்று தாமத மானது. அதன்பிறகு, அங்கு அப்பிரச்சினைக்கு தீர்வு காணப் பட்டு அங்கு சாலை அமைக்கும் பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகின்றன.

இதேபோல, வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை சுமார் 10-க்கும் மேற்பட்ட சாலையோர சிலைகள் அகற்றவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளன. மேலும், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி அருகே சுமார் 2 கி.மீ., தூரத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விரைவில், இதற்கான சுமூக தீர்வு காணப்பட்டு சாலை விரிவாக்க பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுபோன்ற காரணங்களால் சாலை விரிவாக்க பணிகள் முழுமையாக நிறைவு பெற இன்னும் 3 அல்லது 4 மாதங்கள் வரை ஆகும் என தெரிகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x