Last Updated : 28 Jan, 2023 03:39 AM

 

Published : 28 Jan 2023 03:39 AM
Last Updated : 28 Jan 2023 03:39 AM

புதுச்சேரியில் வரும் மார்ச்சில் பட்ஜெட் - திட்டக்குழு கூட்டத்தில் ரூ.11,500 கோடி நிர்ணயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் மார்ச்சில் முழு பட்ஜெட் தாக்கலாகவுள்ளது. இதையொட்டி ஆளுநர் தமிழிசை தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டத்தில் ரூ. 11,500 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுவை சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மாறாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில் அமைந்தபிறகு பிப்ரவரி முதல் வாரத்திலேயே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றனர்.

மத்திய பட்ஜெட்டில் புதுவை மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்படும். அதற்கு முன்னதாக புதுவை மாநில திட்டக்குழுவை கூட்டி எவ்வளவு நிதி தேவை என முடிவு செய்ய வேண்டும். ஆனால் மார்ச் மாதத்தில் திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டதால் தோராயமான தொகையை புதுவைக்கு மத்திய அரசு ஒதுக்கி வந்தது. இந்த நடைமுறையை மாற்றி இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு திட்டமிட்டது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் ஆளுநர் தமிழிசை தலைமையில் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் கூடியது. கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்பிக்கள், தலைமை செயலர், அரசு செயலர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் துறைவாரியாக தேவையான நிதி விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டம் முடிந்த பிறகு ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி என ஆளுங்கட்சி தரப்பில் யாரும் பதில் தராமல் புறப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சிவாவிடம் கேட்டதற்கு, "மூலதனம் இல்லாததால் புதுச்சேரி வருவாய் பெருக்க முடியாத சூழல் உள்ளது. விற்பனை வரி, கலால் வருவாய் வைத்து அரசை நடத்த முடியாது. புதிய தொழிற்சாலைகள், துறைமுகம் வருவாய் பெருக்குவது அவசியம். கடந்த முறை பட்ஜெட் தொகை ஒதுக்கீடு குறைவாக இருந்ததால் வெளிச்சந்தையில் கடன்வாங்குவதாக தெரிவித்து வாங்கவில்லை. மத்திய அரசு நிதியும் முழுமையாக செலவிடவில்லை. 62 சதவீதம்தான் செலவிடப்பட்டுள்ளது. பல துறைகளில் நிதி மிக குறைவாக செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதியை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். ரேஷன் கடை திறக்கவேண்டும் உட்பட பல விஷயங்கள் தெரிவித்துள்ளேன். இம்முறை பட்ஜெட் தொகை 11,500 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து மத்திய அரசுக்கு புதுச்சேரிக்கான நிதி தேவை குறித்து தகவல் தெரிவிக்கப்படும். மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அநேகமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x