Last Updated : 28 Jan, 2023 01:07 AM

2  

Published : 28 Jan 2023 01:07 AM
Last Updated : 28 Jan 2023 01:07 AM

விருத்தாசலம் | இரும்புக் கடையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள் - சார் ஆட்சியர் விசாரணை

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள் பழைய இரும்புக் கடையில் இருந்ததால் அவற்றை சார் ஆட்சியர் பறிமுதல் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ரூ.323 கோடி செலவில், விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் விருத்தாசலம் ஆலடி சாலையில் தனியார் இரும்புக் கடையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள், புத்தம் புதிதாக, ஸ்டிக்கர் கூட பிரிக்காமல், பத்துக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் குவிந்து இருந்துள்ளது. இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள், இரும்பு கடைக்கு எவ்வாறு சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையறிந்த விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி, இரும்புக் கடையில் உள்ள சைக்கிள்களை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விசாரித்தபோது, பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை தவிர வேறு நபர்களுக்கு வழங்கப்படவில்லை என உறுதியாகக் கூறினர்.இது தொடர்பாக இரும்புக் கடையில் விசாரித்தபோது, ஜமாத்தில் உள்ளவர்கள் இந்த சைக்கிளை வழங்கி உதிரி பாகங்கள் இணைத்து தருமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அரசு கொடுத்த இலவச சைக்கிள்கள், தரம் இல்லாத நிலையில் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில், மாணவர்களே எடைக்காக சைக்கிளை கொண்டு சென்று விற்பனை செய்தார்களா? அல்லது குடும்பச் சூழல் காரணமாக அரசு வழங்கிய சைக்கிள்களை விற்பனை செய்தனரா என்ற கோணத்தில் மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x