Published : 27 Jan 2023 08:24 PM
Last Updated : 27 Jan 2023 08:24 PM
சென்னை: குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழ்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம், 2006ன் பிரிவு 30(2)(a)ன் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து, உணவு பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆண்டுதோறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் குட்கா, பான் மசாலா விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இது சம்பந்தமாக அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டு, இந்த உத்தரவை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த சட்ட நடவடிக்கையை எதிர்த்து பல நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
தற்போது, இந்த வழக்குககளை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு அதனுடைய தீர்ப்பில், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்துதல் சட்டத்தில், புகையிலைப் பொருள்களை விளம்பரப்படுத்துவதையும், முறைப்படுத்துவதைப் பற்றியும்தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், புகையிலைப் பொருள்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை என்னும் கருத்து தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது. எனினும், அதே தீர்ப்பில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு ஆணையர்கள் இந்த விதிமுறையின் கீழ்தான் தடை உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவை இந்தியாவிலும் தமிழகத்திலும் வாய் புற்றுநோய்க்கான முதன்மை காரணம் ஆகும்.
உச்ச நீதிமன்ற சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அரசு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் தடையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள சட்டம்/விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை இயற்றுவதா என்பதையும் சட்ட வல்லுநர்களுடன் ஆய்வு செய்து வருகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment