Published : 27 Jan 2023 07:46 PM
Last Updated : 27 Jan 2023 07:46 PM
சிவகாசி: சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தாய்-சேய் நல வாகனம் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி சுகாதார மாவட்டத்தில் உள்ள சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகள் உள்ளது. இதில் ராஜபாளையத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவிற்காக ரூ.7 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய தனி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
சிவகாசி அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 300க்கும் மேற்பட்ட பிரசவங்களும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 350க்கும் மேற்பட்ட பிரவங்களும், ராஜபாளையம் மகப்பேறு மருத்துவமனையில் சுமார் 500 பிரசவங்களும் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடந்தால் தாய் மற்றும் குழந்தையை வீட்டில் சென்று விடுவதற்கு தாய்சேய் நல வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
அதில் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு தாய்சேய் நல வாகனம், சிவகாசியில் ஒன்று, விருதுநகரில் ஒன்று என விருதுநகர் மாவட்டத்தில் 3 இலவச தாய் சேய் நல வாகனம் இயக்கப்பட்டு வந்தது. கரோனா காலத்தில் அவரச சேவையில் தாய்சேய் நல வாகனங்கள் மக்களுக்கு சிறப்பாக பங்காற்றி வந்தன.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த தாய்-சேய் நல வாகனங்கள் காலாவதி ஆனதால் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தாய்-சேய் நல வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இதில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் அதிக அளவிலான கிராமங்களை கொண்ட பகுதி என்பதால் தாய்மார்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அரசு மருத்துவமனையில் தாய் சேய் வாகனம் இல்லை என்றால் ரூ.250 போக்குவரத்து செலவுக்கு என வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பணமும் வழங்கப்படாததால் கிராமப்புற ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை இணை இயக்குனர் முருகவேலிடம் கேட்டபோது, ''காலக்கெடு முடிந்ததால் இரு தாய்சேய் வாகனங்களின் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது புதிய தாய்சேய் வாகனம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு தாய்சேய் நல வாகனம் வழங்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடக்கும் பிரசவத்திற்கு பயண செலவுத் தொகை வழங்கப்படுகிறது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT