Published : 27 Jan 2023 07:38 PM
Last Updated : 27 Jan 2023 07:38 PM
சென்னை: சென்னைப் பெருநகருக்கான புதிய போக்குவரத்துத் திட்டத்தை தயாரிக்கும் பணியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் விரைவில் தொடங்க உள்ளது. இதில் "லைட் மெட்ரோ" திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளது.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 5904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு புதிய போக்குவரத்துத் திட்டம் (Comprehensive Mobility Plan) தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது. மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறையின் தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் அடிப்படையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடும் வகையில் இந்தப் போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படவுள்ளது.
குறிப்பாக, இந்தப் போக்குவரத்து திட்டம் குறைந்த கார்பனை வெளியிடும் வகையிலும், குறைந்த அளவு காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை உண்டாக்கும் வகையில் வடிவமைக்கப்படும். மேலும் மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள், கரோனா போன்ற பெருந்தொற்று ஆகிய காலங்களில் எந்தத் தடையும் இன்றி செயல்படும் வகையிலான மீள் திறனுடன் (Resilient) வகையில் இருக்கும். இதைத் தவிர்த்து அனைவரும் எளிதில் அணுகும் வகையிலும், நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற வகையிலும், சாலை விபத்துகள் இல்லாத பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான போக்குவரத்து திட்டமாக இது இருக்கும்.
இந்நிலையில், இந்தத் திட்டத்தை தயார் செய்யும் பணிக்கான ஒப்பந்தம் விரைவில் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகருக்கு புதிய போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படவுள்ளது. இதில் இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல், சாலை விபத்துகளை குறைத்தல் உள்ளிட்டவை தொடர்பான விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தற்போது மெட்ரோ ரயில் இயங்கும் பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளை மெட்ரோ ரயிலுடன் இணைக்கும் வகையில் ‘லைட் மெட்ரோ’ திட்டத்தை செயல்படுத்துவ தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளது. மேலும், பல்வேறு வகையான போக்குவரத்துத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளது" என்று அவர் கூறினார்.
லைட் மெட்ரோ: லைட் மெட்ரோ என்பது ட்ராம் வண்டியின் நவீன வடிவம் ஆகும். தற்போது உள்ள மெட்ரா ரயில் திட்டங்களில் உயர் மட்ட பாதை அமைக்க ஒரு கி.மீ ரூ.200 முதல் ரூ.250 கோடியும், சுரங்கப்பாதை அமைக்க ரூ.500 முதல் ரூ.550 கோடியும் ஆகும். ஆனால், இந்த லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஒரு கி.மீட்டருக்கு ரூ.100 கோடி தான் ஆகும். எனவே, இந்த மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT