Published : 27 Jan 2023 04:15 PM
Last Updated : 27 Jan 2023 04:15 PM
தஞ்சாவூர்; திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சினைக்கு தீர்வு காணாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.27) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது, விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டும், பின்னர் விவசாயிகள் வெளிநடப்பும் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் ஜனவரி மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, வேளாண்மை இணை இயக்குநர் நல்லராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், விவசாயிகள் அனைவரும் எழுந்து, “கடந்த 59 நாட்களாக திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தினை கண்டித்தும், விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை கேட்டும், வங்கி சிபில் பிரச்சினையை தீர்க்க கோரியும் கரும்பு விவசாயிகள் ஆலை முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இந்தப் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இந்த ஆலை திருஆரூரான் நிறுவனத்திடமிருந்து கால்ஸ் நிறுவனத்துக்கு மாற பெரும்பாலான விவசாயிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்க்கரை துணை இயக்குநருக்கு மாவட்ட நிர்வாகம் உண்மைக்கு புறம்பான தகவலை அறிக்கையாக வழங்கியுள்ளது. விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைத்துவிட்டு பின்னர் ஆலையை மற்றவரிடம் விற்கலாம் என மாவட்ட நிர்வாகம் யோசனையை வழங்கவில்லை.
தொடக்கத்திலிருந்து அப்பகுதி கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்க மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை, போராட்டம் நடத்தும் விவசாயிகளை அடிமைகளாக வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்கிறது” எனக் கூறி மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் கருப்பு துண்டு அணிந்து, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சிறிதுநேரம் கழித்து விவசாயிகள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறி, மாவட்ட நிர்வாகத்தையும், கால்ஸ் நிறுவனத்தையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், “திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்திலிருந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தொகை அனைத்தும் பெற்றுத்தரப்படும். இதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், ”மாவட்டத்தில் பல இடங்களில் தாளடி நெற்பயிர் கதிர் வரும் நிலையில் உள்ளது. இந்நிலையில், வழக்கமாக (ஜன.28) மேட்டூர் அணையை மூடாமல், பிப்.15-ம் தேதி வரை பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் கொள்முதல் நிலையங்களை திறந்து தேக்கமின்றி கொள்முதல் செய்ய வேண்டும்.
கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில், வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைஅதிகாரிகள் எவரும் பங்கேற்பதில்லை, திருவையாறு பகுதியில் தற்போது நெற்பயிரில் மர்ம நோய் பரவி வருகிறது. வேளாண்மைத் துறைக்கு தகவல் அளித்தும் இதுவரை யாரும் பார்வையிட்டு பதில் சொல்ல வரவில்லை ”என்றனர்.
இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், ”கடந்த காலங்களில் மேட்டூர் அணை ஜன.28-க்கு பிறகும் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் மாவட்டத்தில் தேவையான அனைத்து இடங்களிலும் கொள்முதல் நிலையங்களை திறந்து, கொள்முதலை விரைவுப்படுத்த வேண்டும். இதனை நுகர்பொருள் வாணிப கழக உயர் அதிகாரிகள் கண்காணித்து மேற்பார்வையிட வேண்டும்.
கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் அரசுத்துறையின் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்காத அதிகாரிகள் குறித்து கோட்டாட்சியர் தகவல் அனுப்பினால், அரசுத்துறை அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT