Published : 27 Jan 2023 12:24 PM
Last Updated : 27 Jan 2023 12:24 PM
சென்னை: கோவை மாநகராட்சியில் முந்தைய ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநராட்சியில், 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்பணிக்கு 654 பேர் விண்ணப்பித்தனர். 440 பேர் நேர்முகத்தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டு, 54 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரியும், தனக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும் கருணை அடிப்படையில் 2016-ம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், "உரிய தகுதி இருந்தும், முறையாக விளம்பரங்கள் செய்யப்படாததால், தன்னால் இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகளில் கலந்து கொள்ள முடியவில்லை. உரிய விதிகளையும், இடஒதுக்கீட்டு நடைமுறையையும் பின்பற்றாமல் 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரின் செல்வாக்கு காரணமாக, இவர்கள் அனைவரும் ஒரே நாளில் நியமிக்கப்பட்டுள்ளனர்" எனறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை மாநகராட்சி தரப்பில், "இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று இரு மாலை பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. அதற்காக 3 லட்சம் ரூபாய் செலவு ஏற்பட்டது. மேலும், யாருக்கும் எந்த சலுகையும் காட்டப்படவில்லை. உரிய தேர்வு நடைமுறைகளையும், இடஒதுக்கீட்டு முறையையும் பின்பற்றி நியமனங்கள் வழங்கப்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும் என்ற காரணத்தினால் தான் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு நடத்தி, இவர்கள் ஒரே நாளில் நியமிக்கப்பட்டனர். ஏற்கெனவே கருணை அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் மனுதாரருக்கு இந்த நியமனங்கள் குறித்து கேள்வி எழுப்ப அடிப்படை தகுதியில்லை" என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, இளநிலை உதவியாளர் தேர்வு தொடர்பாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு நடவடிக்கைகளில் பங்கேற்காத நிலையில், இந்த பணிநியமனங்களை ஏதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அடிப்படை உரிமை இல்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், நேரடி பணி நியமனங்களின் போது, ஊழல் நடவடிக்கைகள் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT