Published : 27 Jan 2023 09:49 AM
Last Updated : 27 Jan 2023 09:49 AM
சென்னை: பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "திரைப்பட சண்டைப் பயிற்சியாளரான திரு. ஜூடோ ரத்னம் அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி.
பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளரான திரு. ஜூடோ ரத்னம் அவர்கள் (92) வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்ற திரு. ஜூடோ ரத்னம் அவர்கள், போக்கிரி ராஜா, தலைநகரம் போன்ற திரைப்படங்களில் நடிகராகவும் மிளிர்ந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்களின் பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர் ஜூடோ ரத்னம் அவர்கள்.
பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கலையுலகிலும் அரசியல் உலகிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி மறைந்துள்ள திரு. ஜூடோ ரத்னம் அவர்களின் மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தார்க்கும் திரையுலக, அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT