Published : 27 Jan 2023 04:04 AM
Last Updated : 27 Jan 2023 04:04 AM
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய பாதாள சாக்கடை, பசுமைவெளிகள், பூங்காக்கள் அமைத்தல், நீர்நிலைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.1083.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர்த் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டம், பசுமைவெளிகள், பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டனர்.
இதையடுத்து, அம்பாசமுத்திரம், சிதம்பரம், துறையூர் நகராட்சிகளில் குடிநீர்த் திட்டம், ஓசூர் மாநகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டம், தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் திருவேற்காடு, வந்தவாசி, ஜோலார்பேட்டை, வேதாரண்யம், அறந்தாங்கி உள்ளிட்ட நகரங்களில் 72 பசுமைவெளிகள் மற்றும் பூங்காக்களை அமைத்தல், குன்றத்தூர், வடலூர், ராஜபாளையம், முசிறி, ராமேசுவரம் உள்ளிட்ட நகரங்களில் 54 நீர்நிலைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
நீர் நிலைகள் மேம்பாடு: அதன்படி, அம்பாசமுத்திரத்தில் ரூ.36.60 கோடி, சிதம்பரத்தில் ரூ.143.19 கோடி, துறையூரில் ரூ.108.90 கோடி, ஓசூர் மாநகராட்சியில் ரூ.574.96 கோடி, தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.152.14 கோடி நிதியில் பணிகள் செயல்படுத்தப்படும். இதேபோல, திருவேற்காடு, வந்தவாசி, ஜோலார்பேட்டை, வேதாரண்யம், அறந்தாங்கி உள்ளிட்ட நகரங்களில் 72 பசுமைவெளிகள் மற்றும் பூங்காக்கள் அமைக்க ரூ.27.80 கோடி, குன்றத்தூர், வடலூர், ராஜபாளையம், முசிறி, ராமேசுவரம் உள்ளிட்ட நகரங்களில் 54 நீர் நிலைகளை மேம்படுத்த ரூ.39.59 கோடி என மொத்தம் ரூ.1,083.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், மத்திய அரசின் மானியம் ரூ.361.68 கோடி, மாநில அரசு மானியம் ரூ.294.60 கோடி, உள்ளாட்சிகளின் பங்களிப்பு ரூ.426.90 கோடியாகும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 131 பணிகளுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT