Published : 27 Jan 2023 07:15 AM
Last Updated : 27 Jan 2023 07:15 AM
பழநி: பழநி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 8.15 முதல் 9.15 மணிக்குள் நடைபெறுகிறது. தொடர்ந்து, தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் மாலையில் நடைபெறுகிறது.
முருகனின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோயிலில் 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிட்டு திருப்பணிகளைத் தொடங்குவதற்கு முன் மேற்கொள்ளப்படும் பாலாலய பூஜை 2019-ம் ஆண்டு நடைபெற்றது.
கரோனா ஊரடங்கால் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் இயல்பு நிலை திரும்பியதையடுத்து திருப்பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடந்து முடிந்தன.
16 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. இதனால் பழநி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 8-ம் கால வேள்வி பூஜைக்குப் பின் காலை 8.15 மணி முதல் 9.15 மணிக்குள் ராஜகோபுரம், தங்கக் கோபுரம், மயில் வாகனம், விநாயகர் உட்பட 10-க்கும் மேற்பட்ட சந்நிதி கோபுரங்களுக்கு பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தின் போது ராஜ கோபுரம் மற்றும் தங்க கோபுரங்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்தவாறு மலர்களைத் தூவுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிகாலை 5 முதல் பிற்பகல் 2 மணி வரை ‘ட்ரோன்’கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தைக் காண 6,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கோபுர விமான தளம் மற்றும் கோயில் வெளிபிரகாரத்தை 39 பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் 150 பேர் வீதம் தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் காலை 7.15 மணிக்குள் மலைக்கோயிலுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய மற்றும் மிக மிக முக்கியப் பிரமுகர்களைத் தவிர மற்ற பக்தர்கள் யானைப் பாதை வழியாக மலைக்கோயிலுக்குச் சென்று தரிசனம் முடித்த பின் படிப்பாதை வழியாக இறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதப் பை வழங்கப்பட உள்ளது.மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்பர் என்பதால் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்துள்ளன.
மாலையில் திருக்கல்யாணம்
இதற்கிடையே, தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இன்று மாலை 6 மணிக்கு சண்முகர், வள்ளி, தேவசேனாவுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT