Published : 15 Dec 2016 12:44 PM
Last Updated : 15 Dec 2016 12:44 PM
தேனி மாவட்டத்தில் முடங்கிப்போன பல்வேறு திட்டங்களை புதிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செயல்படுத்துவாரா? என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தேனி-போடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல்-குமுளி ரயில் பாதை திட்டம் கிடப்பில் உள்ளது. ஆண்டிபட்டியில் தொடங்கப்பட்ட வைகை உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா திட்டம் மத்திய அரசால் கைவிடப்பட்டது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலுக்கு சாலை அமைக்கும் திட்டத்திற்கும், பெரியாறு அணையில் 152 அடியாக நீர்தேக்கவும் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. இப்பணிகளை போடி தொகுதி எம்எல்ஏவும், தமிழகத்தின் புதிய முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் செயல்படுத்துவாரா? என தேனி மாவட்ட மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் தேனி மாவட்ட மக்கள் சிலர் கூறியதாவது:
(திருப்பதிவாசன், சித்ரா, குமரவேல்)
ஏ.திருப்பதிவாசன் (18-ம் கால்வாய் திட்ட விவசாய சங்க செயலாளர்):
தேவாரம், கோம்பை ஆகிய பகுதிகள் போடி தொகுதியில் இருந்தன. தொகுதி சீரமைப்பிற்கு பின்னர் கம்பம் தொகுதியில் சேர் க்கப் பட்டுள்ளது. தேவாரத்தில் இருந்து கேரளத்தை இணைக்கும் சாக்குலூத்து மெட்டுச்சாலை திட்டம், கோம்பையில் இருந்து கேரளத்தை இணைக்கும் ராமக்கல் மெட்டுச்சாலைச் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு திட்டங்களும் பல ஆண்டுகளாக முடங்கியுள்ளன. இது தவிர போடி தொகுதிக் குட்பட்ட டாப்ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன், முதுவாக்குட்டி, மூட்டம் ஆகிய மலை கிராமப் பகுதிகளில் சாலை வசதியில்லாமல் உள்ளது. குரங்கனி மலை கிராமத்தை சுற்றுலா தளமாக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் திண்டுக்கல்-குமுளி நான்கு வழிச் சாலை திட்டமும் பல ஆண் டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. நிறுத்தப்பட்டுள்ள ஹைவேவிஸ் மலையின் கோடை விழாவை மீண்டும் நடத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்ரா (குடும்ப தலைவி):
தமிழகத்தில் ரயில் சேவை இல்லாத மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. பேருந்துகளில் பயணம் செய் வதால் கால விரயமும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க போடி-மதுரை அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
திண்டுக்கல்-குமுளி ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். பல ஆண்டு திட்டமான பெரியகுளத்தில் மாம்பழக்கூழ் பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
குமரவேல் (வியாபாரி):
எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம் என மூன்று முதல்வர் களை தந்த இந்த மாவட்டத்தில் வைகை உயர் தொழில் நுட்ப நெசவுப் பூங்கா திட்டத்தை செயல் படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்து விட்டது.
மத்திய அரசு நிதியை மாநில அரசே ஒதுக்கீடு செய்து நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திராட்சை விவசாயத்தை பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு, நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதோடு, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலை ஆன்மிகத் தலமாக அறிவிக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT