Published : 27 Jan 2023 03:34 AM
Last Updated : 27 Jan 2023 03:34 AM
மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், ரயில்வே காலனி செம்மண் திடலில் நடந்த விழாவில் ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் ராணுவ உடையில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.
பின்னர் பேசியவர், "இக்கோட்டம் 9 மாதங்களில் ரூ. 800 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்தாண்டைவிட 57 சதவீதம் அதிகம். ரயில்வே வாரியம் நிர்ணயித்த வருமான இலக்கைவிட 20 சதவீதம் கூடுதல். இது ஏப்ரல் முதல் டிசம்பர் வரை. இக்கோட்டத்தில் ரயில்கள் மூலம் 25 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இதன்மூலம் ரூ. 502.05 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு வருவாயைவிட 79 சதவீதம் அதிகம்.
சரக்கு போக்குவரத்தில் 2.20 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது வாரியம் நிர்ணயித்த இலக்கான 1.67 மில்லியன் டன்னை காட்டிலும் 32 சதவீதம் கூடுதல். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அதிகபட்ச அளவாக 2.2 லட்சம் டன் சரக்குகளை சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் எப்போதும் இல்லாத அதிகப்பட்ச வருமானமாக ரூபாய் 19.99 கோடி ஈட்டப்பட்டுள்ளது. 117 சரக்கு ரயில்களில் டிராக்டர்கள், 82 ரயில்களில் சுண்ணாம்புக்கல், 45 ரயில்களில் மரக்கரி, 433 ரயில்களில் ரசாயன உரங்கள், 12 ரயில்களில் சரளைக்கல்கள், 4 ரயில்களில் ஜிப்சம் ஆகியவை பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மின்னணு ஏல முறை வாயிலாக விளம்பரம், வாகன காப்பகம், கழிப்பறை மேலாண்மை, உடைமைகள் காப்பகம், பார்சல் ரயில் பெட்டி குத்தகை, குளிர்சாதன ஓய்வறை ஒப்பந்தம் வாயிலாக ரூ. 33.97 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. மார்ச் மாத்திற்குள் மதுரை கோட்டத்தில் 90 சதவீதம் பாதைகள் மின்மயக்கப்படும். ரயில்வே ஊழியர் நல குறைபாடுகளை தீர்த்து வைக்க "தீர்வு" என்ற பெயரில் வாட்ஸ் அப் செயலி மூலம் குறை தீர்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர் நலம் சார்ந்த தகவல்களை எளிதாக பெற "களஞ்சியம்" என்ற இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT