Published : 26 Jan 2023 11:01 PM
Last Updated : 26 Jan 2023 11:01 PM
புதுச்சேரி: அதிக விலையால் நோயாளிகள் தவிப்பதால் ஹீமோபிலியா (Haemophilia) நோய்க்கான மருந்தை குறைந்த விலையில் தாராளமாக கிடைக்க பிரதமர் மோடி உதவ வேண்டும் என பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட டாக்டர் நளினி கோரிக்கை வைத்துள்ளார்.
மருத்துவத்துறையில் சேவையாற்றியதற்கு புதுச்சேரியைச் சேர்ந்த நளினி பார்த்தசாரதிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நளினி பார்த்தசாரதி, "புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பயின்று அங்கேயே குழந்தைகள் நல மருத்துவராக பணியை தொடங்கினேன். குழந்தைகளுக்கு ஹீமோபிலியா நோய் பாதித்து அவதிபட்டதை கண்டு இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதற்காக ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியே வந்தேன். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஹீமோபிலியா மையத்தை கோரிமேட்டில் அமைத்தேன்.
இந்த மையம் ரத்தம் உறைவதைத் தடுக்கும் மரபணு கோளாறுக்கு சிகிச்சையளிக்க இலவச மருந்துகளை வழங்கி வருகிறது. என்னுடைய வழக்கமான கண்காணிப்பு மற்றும் உதவியின் கீழ் சுமார் 300 நோயாளிகள் உள்ளனர். 6 வயது குழந்தை முதல் 72 வயது முதியோர் வரை சிகிச்சையில் உள்ளனர். மருந்து ரத்த போக்கு ஏற்படும்போது தரப்படும். ஆன்டி-ஹீமோபிலியா காரணியின் (AHF) ஒரு குப்பி அளிக்க நோயாளிக்கு சுமார் 10,000 ரூபாய் செலவாகும். நாங்கள் அவற்றை இலவசமாக வழங்குகிறோம்.
நோயாளிகள் ரத்தப்போக்கு பற்றி தெரிவிக்கும்போது அவர்களுக்கு நரம்பு வழியாக மருந்து கொடுப்பதற்காக உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காணிக்கையாக்குகின்றேன். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள் விலை அதிகமாக இருக்கிறது. இதை குறைந்த விலையிலும், தாராளமாக கிடைக்கும் வகையிலும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவிலேயே இம்மருந்தை உற்பத்தி செய்ய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கோரிக்கை விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT