Published : 26 Jan 2023 07:15 PM
Last Updated : 26 Jan 2023 07:15 PM
தஞ்சாவூர்: தஞ்சையில் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்ட உத்தரவாதம் கோரி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.
விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் டிராக்டர் பேரணிக்கு ஐக்கிய விவசாய முன்னணி சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பினை ஏற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் தஞ்சாவூர் நகரத்தில் ஏராளமானோர் பங்கேற்ற டிராக்டர் பேரணி தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது.
பேரணியில், 'விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், டெல்லி போராட்டத்தில் உயிர் நீத்த 714 விவசாயிகளுக்கு நினைவிடம் அமைத்திட வேண்டும், போராட்டத்தின் போது இறந்துள்ள விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும், டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் மீது நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு எழுத்து பூர்வமாக எழுதிக் கொடுத்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும். உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைக்கு காரணமான மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே துவங்கிய பேரணிக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டில்லிபாபு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் விவசாய சங்க நிர்வாகிகள் வீரமோகன், பழனிராஜன், திருநாவுக்கரசு, அருணாச்சலம், கோவிந்தராஜ், செந்தில், ராமசாமி, சுந்தரவிமலநாதன், பழனியப்பன், ஜெய்சங்கர் உள்ளிட்டார் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னைபாண்டியன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் பேரணி புதுக்கோட்டை சாலை வரை சென்றது. பின்னர் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்ல பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சுமார் 1 கி.மீட்டருக்கு முன்பாகவே போலீஸார் பேரணியை நிறுத்திவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT