Published : 04 Dec 2016 12:35 PM
Last Updated : 04 Dec 2016 12:35 PM

அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் நெருங்கும் நிலையிலும் பணத் தட்டுப்பாடு நீங்காததால் பரிதவிக்கும் மக்கள்

பண மதிப்பு நீக்கம் என்ற அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் நெருங்கும் நிலையிலும் பணத் தட்டுப்பாடு நீங்காததால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் பண மதிப்பு நீக்கம் என்று நவம்பர் மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. மேலும், ரூ.2000, ரூ.500 நோட்டுகள் புதிதாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அடுத்து கடைகள், மருந்தகங்கள், ஹோட்டல்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்காததால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். பழைய நோட்டுகளை வங்கிகளில் அளித்துவிட்டு, புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து, வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். ஆனால், “ஒருவருக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே, அதுவும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டதால், மக்கள் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகினர்.

இதனால், வங்கிகளில் நீண்டவரிசைகளில், வெகுநேரம் காத்திருந்து ரூ.4 ஆயிரம் பணத்தைப் பெற்றுச் சென்றனர். மேலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் ரூ.2 ஆயிரம் மட்டுமே கிடைத்தது. பணத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். பால் வாங்கவும், மருந்து வாங்கவும்கூட பணமில்லை என்று பலரும் புகார் தெரிவித்தனர். அன்றாடச் செலவுகளுக்கே பணமின்றித் தவித்த நிலையில், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளின்போதும் பணமின்றி மக்கள் பரிதவித்தனர்.

இதற்கிடையில், புதிய ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விட்டுள்ளதாக அரசு அறிவித்தது. ஆனால், ஒரு சில வங்கிகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே ரூ.500 கிடைத்தது. இதனால், ரூ.500, ரூ.100 நோட்டுகள் தட்டுப்பாட்டால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி, ஒரு மாதம் நெருங்கும் சூழ்நிலையிலும் இதுவரை பணத் தட்டுப்பாடு பிரச்சினை தீரவில்லை.

பணம் இல்லாத ஏடிஎம்-கள்

தற்போதும் ஏராளமான ஏடிஎம்-களில் ‘பணம் இருப்பு இல்லை’ என்று எழுதப்பட்ட அட்டைகள் தொங்குகின்றன. இதனால், அங்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதுமட்டுமின்றி, பணம் உள்ள ஏடிஎம்-களில் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். அவற்றிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். கடந்த மாத செலவுக்காக வாங்கிய கடனை, இந்த மாதம் அடைத்துவிடலாம் என்று எண்ணியிருந்தவர்கள், தற்போதும் நீடிக்கும் பணத்தட்டுப்பாட்டால் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து கோவை ரெட் ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த ராணி(42) ‘தி இந்து’விடம் கூறும்போது, “கறுப்புப் பணத்தை ஒழிப்போம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே. அதேசமயம், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், புழக்கத்தில் இருந்த நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால், மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளோம். அன்றாட செலவுக்கே பணமில்லை என்ற நிலையில், எதிர்பாராத மருத்துவச் செலவுகள், விருந்தினர் வருகை ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறோம்.” என்றார்.

சில்லறையால் அவதி

மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் டேவிட்(24) கூறும்போது, “நான் கோவையில் தங்கி, தனியார் கல்லூரியில் முதுநிலைப் பட்டப் படிப்பு பயின்று வருகிறேன். ஹோட்டலில் சாப்பிடச் சென்றால், ரூ.100, ரூ.50 கொடுங்கள் என்கிறார்கள். அதேபோல, அனைத்துக் கடைகளிலுமே சில்லறை கேட்கிறார்கள். ஆனால், ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே வருகின்றன. கடந்த முறை கோவையிலிருந்து தொலைவில் உள்ள கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த ஏடிஎம்-ல் பணத்தை எடுத்து வந்தேன். தற்போது என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துள்ளேன்” என்றார்.

பூ, காய்கறிகள் விற்பனை சரிவு

கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கப் பொருளாளர் கே.கே.அய்யப்பன் கூறும்போது, “பணத் தட்டுப்பாடு காரணமாக 40 சதவீதம் வரை விற்பனை குறைந்துவிட்டது. முகூர்த்த சீசன் நாட்களில்கூட பெரிய அளவுக்கு பூக்கள் விற்பனையாகவில்லை. அதுமட்டுமின்றி, பூக்களின் விலையும் குறைந்துவிட்டது. செவ்வந்தி கிலோ ரூ.20-க்கு விற்பனையாகிறது. விலையும் சரிந்து, விற்பனையும் குறைந்துள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்” என்றார்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, “வழக்கமான விற்பனையைவிட 30 சதவீத விற்பனை குறைந்துவிட்டது. காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. ஆனால், அந்த அளவுக்கு விற்பனை இல்லை. மேலும், மழை காரணமாக தக்காளி, வெங்காயம் ஆகியவை அழுகி, வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

உற்பத்தி பாதிப்பு

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந் தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் (காட்மா) தலைவர் எஸ்.ரவிக்குமார் கூறும்போது, “சிறு தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சம்பளம், மூலப் பொருட்கள் வாங்குதல் உள்ளிட்டவைகளுக்காக மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தேவைப்படும். ஆனால், வங்கிகளில் வாரம் ரூ.50 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, வங்கிகளில் போதுமான பணம் இல்லாததால், அந்த தொகையும் சரியாக வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாததால், பலர் விடுமுறை எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால், உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தைக் காட்டிலும், இந்த மாதம் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. உடனடியாக வங்கிகளில் போதுமான அளவுக்கு ரூ.500, ரூ.100 நோட்டுகளை விநியோகிக்கவும், ஏடிஎம்-களில் தேவையான அளவு இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு மூலம் சம்பளம் வழங்குமாறு கூறுகின்றனர். நடைமுறையில் இதை உடனடியாக செயல்படுத்துவது எப்படி? இதற்கு குறிப்பிட்ட காலஅவகாசம் வழங்க வேண்டும். கடந்த 6 மாதங்களில் தொழில் நிறுவனத்தினர் எந்த அளவு பணத்தை எடுத்துள்ளார்களோ, அதைக் கணக்கிட்டு, சராசரித் தொகையை வழங்க வேண்டும். அதேபோல, ஒரு மாதத்துக்கான தொகையை ஒரே தவணையில் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்னணு பணப் பரிமாற்றம்

மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்குமாறு மத்திய அரசு கூறுகிறது. ஆனால், மின்னணு அட்டைகளை உபயோகப்படுத்தும்போது, குறிப்பிட்ட அளவு தொகையை வங்கிகள் பிடித்தம் செய்கின்றன. இந்த மாதத்துக்கு மட்டுமே பணம் பிடித்தம் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இருந்து பணத்தைப் பிடிப்பார்கள். இந்த சூழலில், பொதுமக்கள் எப்படி மின்னணு அட்டைகளை அதிகம் பயன்படுத்த முடியும். எனவே, மின்னணு அட்டைகளின் பயன்பாட்டுக்கு, பணம் பிடித்தம் செய்யப்படாது என்று அறிவிக்க வேண்டும்” என்றார்.

நிரந்தரத் தீர்வு அவசியம்

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக என்று கூறி, ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் பண மதிப்பை நீக்கியுள்ளதாக அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினை சில நாட்களில் தீரும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். எனினும், தற்போது ஒரு மாதம் நெருங்கியுள்ள சூழ்நிலையிலும், இதுவரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படவில்லை. இன்னும் ஏடிஎம் மையங்களுக்குச் சென்று மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதும், பணம் உள்ள ஏடிஎம் மையங்களில் நீண்டவரிசையில் காத்திருப்பதும் தொடர்கிறது.

அதுமட்டுமின்றி, முன்பு வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் பழைய நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய நோட்டுகளை வழங்கினர். தற்போது பழைய நோட்டுகளை வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த முடியும் என்று அறிவித்துள்ளனர். பழைய நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய நோட்டுகளைப் பெற முடிவதில்லை. வங்கியில் இருந்து பணத்தை எடுப்பதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களும் பணத்தை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். கோவையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 50 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதுடன், ரொக்கமாக ரூ.3 ஆயிரம் மட்டுமே தரப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளால், மக்கள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே, வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் மூலம் அதிக அளவில் ரூ.500, ரூ.100 நோட்டுகளை விநியோகிப்பதே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும். மேலும், தொழில் துறையினருக்கு வங்கிகளில் வழங்கப்படும் பணத்தின் அளவை உயர்த்த வேண்டியதும் அவசியம் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x