Published : 26 Jan 2023 04:35 PM
Last Updated : 26 Jan 2023 04:35 PM
சென்னை: சிறப்பு வாகன தணிக்கை மூலம் சென்னையில் 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 726 தங்கும் விடுதிகளில் சோதனை செய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இரவு நேரங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் அபாயகரமான முறையிலும், அதிவேகத்திலும் செல்லும் நபர்களை பிடிக்க சிறப்பு வாகனத் தணிக்கைகள் மற்றும் குற்ற நபர்களை பிடிக்க தங்கும் விடுதிகளான லாட்ஜ், மேன்ஷன்களில் சோதனைகள் மேற்கொள்ள ஆணையர் உத்தரவிட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (ஜன.25) இரவு சிறப்பு தணிக்கைகள் மேற்கொண்டனர்.
இதன்படி முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் 9,013 வாகனங்கள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் விசாரணை மற்றும் சோதனையிடப்பட்டது. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 52 வாகனங்கள், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத 98 வாகனங்கள் என மொத்தம் 150 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
Vaahan APP மூலம் 242 வாகனங்கள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆவணங்கள் மற்றும் வாகனத்தின் பதிவு எண்கள் சரி பார்க்கப்பட்டது. மேலும், Face Recognition Software மூலமாக முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்கள் அடையாளம் காணும் FRS கேமராவை கொண்டு 3,538 நபர்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டனர்.
இதுபோல, 555 லாட்ஜுகள் மற்றும் 171 மேன்ஷன்கள் என மொத்தம் 726 தங்கும் விடுதிகளில் காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டனர். இந்த சோதனையில், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT