Published : 26 Jan 2023 03:57 AM
Last Updated : 26 Jan 2023 03:57 AM
சென்னை: இந்திய நாட்டின் 74-வது குடியரசு தினம், இன்று (ஜன.26) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றுகிறார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், துணை ராணுவம் மற்றும் காவல் படைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புகள் இடம் பெறுவது வழக்கம்.
அதன்படி இன்று நடைபெறும் அணிவகுப்பில் இந்திய கடற்படையைச் சேர்ந்த இசைக் குழு பங்கேற்கிறது. இந்த இசைக் குழுவுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரர் அந்தோணி ராஜ் தலைமை வகிக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள இருந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவர் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ‘ஐஎன்எஸ் குஞ்சாலி’ என்ற இசை பயிற்சிப் பள்ளியில் ‘மாஸ்டர் சீஃப் பெட்டி ஆபீசரா’கப் பணிபுரிந்து வருகிறார்.
இந்தியக் கடற்படையில் கடந்த 1994-ம் ஆண்டு பணியில் சேர்ந்த அந்தோணி ராஜ், 1995-ம் ஆண்டு கார்னெட் வாத்திய இசைக் கலைஞரானார். பின்னர், படிப்படியாக உயர்ந்து தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியத்தில் டிரம் மேஜராக பணியாற்றி உள்ளார்.
இன்று நடைபெறும் அணிவகுப்பில் இந்திய கடற்படை சார்பில், 188 கடற்படை இசை கலைஞர்கள் பங்கேற்கின்றனர். அணிவகுப்பின்போது, கடற்படை இசைக்குழுவை குடியரசு தலைவரை கடந்து செல்லும்போது, கடற்படையின் புதிய பாடல் இசைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, அந்தோணிராஜ் கூறும்போது, "ஓய்வுபெற்ற தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் தேவசகாயத்திடம் இருந்து இசையை நான் கற்றுக் கொண்டேன். அவர்தான் என்னை கடற்படையில் சேர உற்சாகப்படுத் தினார். கடற்படையின் இசைப் பிரிவில் சேர அதிக வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT