Published : 26 Jan 2023 04:12 AM
Last Updated : 26 Jan 2023 04:12 AM
சென்னை: இந்தியாவின் 74-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படு கிறது. இதையொட்டி, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய நன்னாள். நமது தேசத் தலைவர்கள் முன்னெடுத்துக் கொடுத்த இறையாண்மை, பொதுவுடமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கவும், அரசியலமைப்பு சாசனம் வகுத்து கொடுத்த ஜனநாயக கடமைகளை உணர்ந்து, பொறுப்புள்ள குடிமக்களாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த நாளில் உறுதி ஏற்போம்.
மாதம் ஒருமுறை கதர், கைத்தறி ஆடைகளை உடுத்தி, நம் பாரம்பரிய பெருமையை நிலைநிறுத்துவோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்திய குடியரசு பல சாதனைகளை படைத்திருந்தாலும், சமீபகாலத்தில் பல சவால்களை சந்தித்து வருகிறது. அரசமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அத்தகைய உரிமைகளை பாதுகாத்து, மத, சமூக, நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கும் வகையில், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள்வதன் மூலமாகவே இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பெற்ற சுதந்திரத்தை பேணிப் பாதுகாப்பது மத்திய, மாநில அரசுகள், பொதுமக்களின் கடமை. இந்த அனைத்து தரப்பினரும் அரசியலமைப்பு சட்டத்தை மதித்து, முறையாக கடைபிடிக்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொள்வோம். எந்த பேதமுமின்றி குடிமக்கள் அனைவரையும் நடுநிலையோடு மதிக்க வேண்டிய அவசியத்தை அரசியலமைப்புதான் கட்டிக் காப்பாற்றுகிறது. அதன் வழியில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமை, நல்லிணக்கம், நிம்மதியோடு வாழ்வதற்கான சூழலை பேணவும் உறுதியேற்போம்.
சமக தலைவர் சரத்குமார்: பெற்ற சுதந்திரத்தை பேணுவதுபோல, இந்தியாவின் முன்னோடிகள் வகுத்து கொடுத்திருக்கும் சட்ட, திட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு, கடமை மறவாது, உரிமை தவறாது செயல்படுவோம். அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிட்டதுபோல, சமத்துவம், சமூகநீதி, இறையாண்மையை பாது காப்போம்.
பாரிவேந்தர் எம்.பி.: இந்திய அரசியலமைப்பு உருவாக உன்னத பங்களிப்பு செய்த விடுதலைப் போராட்ட வீரர்கள், சட்டம் இயற்றிய மேதைகள் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். ஜனநாயகத்தைக் கொண்டு தேசத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகளில் ஈடுபடுவதோடு, வலிமை, அமைதி, பொருளாதார வளம், சமூக முன்னேற்றம், கலாச்சார துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு குடிமகனும் தனது பங்களிப்பை அளிக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, மமக தலைவர் ஜவாஹிருல்லா, மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT