Published : 26 Jan 2023 05:44 AM
Last Updated : 26 Jan 2023 05:44 AM
சென்னை: குடியரசு தினத்தன்று ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அறி வித்துள்ளன.
குடியரசு தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அக்கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: குடியரசு தினத்தையொட்டி ஆளுநர்ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் புறக்கணிக்கிறோம். பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
ஆர்எஸ்எஸ் கொள்கைகளை திணிப்பதில் முழு மூச்சாக செயல்படும் இவர் திருந்துவதற்கு வாய்ப்பில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடநினைக்கும் மத்திய பாஜக அரசின்கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதும் கடும் கண்டனத்துக்குரியது. இனிவரும் காலங்களிலாவது பொறுப்பை உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தேநீர் விருந்து அழைப்பிதழில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என்று ஆளுநர்குறிப்பிட்டிருந்தாலும், அவர் தன்அரசியல் அமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றவில்லை. அவரால் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து அவர் ஆர்எஸ்எஸ் சார்பு கருத்துகளையே பேசி வருகிறார். எனவே, அவர் அழைப்பு விடுத்துள்ள தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழ்நாடு என்ற பெயரையே சர்ச்சை ஆக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அதைத் தொடர்ந்து அலையலையாக எழுந்த எதிர்ப்புக்குப் பின் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.
இருப்பினும் சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்த வரலாற்று தவறுக்காக, மாநில மக்களிடம் வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோஇல்லை. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களை பல மாதங்களாக கிடப்பில் போட்டு, அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை கொடுத்து வருகிறார். வாக்களித்த மக்களை அவமதிக்கிற இந்த ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் ஆளுநர் அளிக்கும்தேநீர் விருந்தை புறக்கணிக் கிறோம்.
விசிக தலைவர் திருமாவளவன்: தேநீர் விருந்துக்கு விசிகவின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த ஆளுநருக்கு நன்றி. அதேநேரம், அவ்விருந்தில் பங்கேற்பதைத் தவிர்ப்பது என முடிவு செய்திருக்கிறோம். மேலும் தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். அவர் கொள்கை அளவில் தமிழக அரசோடும் தமிழ் மக்களோடும் முரண்படுகிறார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் அரசியல் சட்டத்துக்கு முரணானது. தமிழகத்தில்பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்றஆர்எஸ்எஸ் நோக்கத்தில் ஆளுநர்ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக் கணிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT