Published : 25 Jan 2023 09:39 PM
Last Updated : 25 Jan 2023 09:39 PM

தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல், மாசிக்கு பத்மஸ்ரீ விருது

வடிவேல், மாசி | கோப்புப்படம்

செங்கல்பட்டு: பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான தமிழகத்தை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பில் இவர்கள் விலங்குகள் நல பிரிவில் பத்மஸ்ரீ விருதைப் பெறுகின்றனர்.

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களும், இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவர்கள் இருவரும். அபாயகரமான மற்றும் விஷம் கொண்ட பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். முறையான கல்வியை பெறவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பயணம் செய்து பாம்புகளை பிடித்துள்ளனர்.

தங்கள் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த முறையை பின்பற்றி பாம்பு பிடித்து வருகின்றனர். இந்திய ஹெல்த்கேர் பிரிவில் இருளர் இன மக்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாண உயிரியல் பூங்காவில் சுற்றித்திரிந்த மலைப்பாம்புகளை பிடித்து கொடுத்து அமெரிக்க அரசுக்கு இவர்கள் இருவரும் கடந்த 2017-ல் உதவியுள்ளனர். சுமார் இரண்டு மாத காலம் வரை அங்கேயே தங்கியிருந்து 33 பர்மீஸ் ரக மலைப்பாம்புகளை பிடித்து கொடுத்து விட்டு நாடு திரும்பியவர்கள் வடிவேலுவும், மாசியும். 'ஸ்நேக் மேன் ஆப் இந்தியா' என அழைக்கப்படும் ராமுலஸ் விட்டேக்கர் உடன் பயணிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x