Published : 25 Jan 2023 07:03 PM
Last Updated : 25 Jan 2023 07:03 PM
சென்னை: “தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதில் சி.பி.ஐ(எம்) பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாடு என்ற பெயரையே சர்ச்சை ஆக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அதைத் தொடர்ந்து அலையலையாக எழுந்த எதிர்ப்பிற்கு பின் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். இருப்பினும், சட்டமன்றத்தில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்த வரலாற்று தவறுக்காக, மாநில மக்களிடம் வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ இல்லை.
தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களை பல மாதங்களாக கிடப்பில் போட்டு, அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை கொடுத்து வருகிறார்.
வாக்களித்த மக்களை அவமதிக்கிற இந்த ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் போராடி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வாகும். எனவே, சி.பி.ஐ(எம்) சார்பில் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை" என்று அதில் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவினைத் தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இந்தத் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரின் தேநீர் விருந்தை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT