Published : 25 Jan 2023 04:42 PM
Last Updated : 25 Jan 2023 04:42 PM
சென்னை: "மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதில் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒத்த கருத்தோடு செயல்பட்டு வருகிற நேரத்தில், அதற்கு வலிமை சேர்க்கிற வகையில் கமல்ஹாசனின் கருத்து அமைந்திருக்கிறது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈ.வெ.கி.ச. இளங்கோவனை ஆதரிப்பது எனும் முடிவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றிருக்கும் அரசியல் சூழலில் மதவாத சக்திகள் முழு பலத்துடன் எதிர்க்கப்பட வேண்டியவைகள் என்பதை கருத்தில் கொண்டு நிபந்தனையற்ற ஆதரவை மக்கள் நீதி மய்யம் வழங்கியிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையும், இறையாண்மையும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டதை முற்றிலும் உணர்ந்து மதவாத, வகுப்புவாத சக்திகளை வீழ்த்த வேண்டுமென்பதில் கமல்ஹாசனுக்கு இருக்கிற தீவிரத்தன்மையை மனதார பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.
ஜனநாயக சக்திகளின் குரல்வளையும், கருத்துரிமையும் ஒடுக்கப்படுவது குறித்தும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகவும், தீவிரமான கருத்தை மக்கள் நீதி மய்யம் வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்திய நாடு இதுவரை காணாத வகையில் அரசமைப்புச் சட்டமும், ஜனநாயக நிறுவனங்களும் அச்சுறுத்தப்படுகிற இக்கால கட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதில் தலைவர் ராகுல் காந்தியும், திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒத்த கருத்தோடு செயல்பட்டு வருகிற நேரத்தில், அதற்கு வலிமை சேர்க்கிற வகையில் கமல்ஹாசனின் கருத்து அமைந்திருக்கிறது.
சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்த கமல்ஹாசனுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாகவும், காங்கிரஸ் கட்சி சார்பாகவும் மீண்டும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT