Published : 20 Apr 2014 10:35 AM
Last Updated : 20 Apr 2014 10:35 AM
முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னையில் முகாமிட்டி ருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன். ’தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி.
தமிழகத்தில் இடதுசாரிகளுக்கான தேர்தல் களம் எப்படி இருக்கிறது?
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் களத்தில் நிற்கிறார்கள். மக்கள் மத்தியில் எங்களுக்குள்ள வரவேற்பு புதுத் தெம்பைத் தந்திருக்கிறது. இனிமேல், வேறு எந்தக் கட்சியுடனும் குறிப்பாக ஆளும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என மக்கள் எங்களுக்கு யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தல் தந்த படிப்பினையால் இனிமேல் அதிமுக, திமுக கட்சிகளுடன் கூட் டணி வைப்பதில்லை என்ற மனநிலைக்கு இடதுசாரிகள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லலாமா?
அப்படி எல்லாம் கட்சிகளின் பெயரை குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. இப்போது ஒரு நிலையில் இருப்பவர்கள் பிறகு தங்களை மாற்றிக் கொள்ளலாம். அல்லது வகுப்புவாதத்துக்கு எதிராக எல்லோரையும் ஓரணியில் திரட்டும் சூழல் வரலாம். எந்தச் சூழலிலும் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது சரியல்ல.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் யாரை பிரதமராக்கப் போகிறார்கள்?
அது அவர்களைத்தான் கேட்க வேண்டும். தங்களுக்கு பதவி கிடைக்கும் என்றால் அவர்கள் யாரை வேண்டுமானாலும் பிரதமராக்குவார்கள்.
மூன்றே மாதங்களில் மின்வெட்டுப் பிரச்சி னையை தீர்ப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த அதிமுக, மூன்று வருடங் களாகியும் சாக்குப் போக்குச் சொல்கிறதே?
மின் உற்பத்தி திட்டங்களுக்கு தொலைநோக்குடன் கூடிய திட்டமிடல் வேண்டும். 1967-க்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக-வும் அதிமுக-வும் சரியான திட்டமிடல் செய்யாததன் பலனை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் நோக்கில் காங்கிரஸ் ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவு கொடுப்பார்களா?
அது மத்தியத் தலைமை எடுக்கவேண்டிய முடிவு.
இந்தத் தேர்தலில் வேடிக்கை காட்டும் பொம்மை போல் ஆகிவிட்டாரே விஜயகாந்த்?
விஜயகாந்தைப் பற்றி நாட்டு மக்களுக்கே தெரியும். அதுதான் அவரைப் பார்த்ததுமே விசில் அடிக்கிறார்கள். அவரும் பதிலுக்கு விசில் அடிக்கிறார். பிரமாதம்!
தன்னை வீழ்த்த ராஜபக்சே, கேரள அரசு, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இவர் களெல்லாம் சதி செய்வதாக வைகோ கூறுகிறாரே?
ஒபாமா, ஏஞ்சலா மெர்க்கெல் உள்ளிட்ட அகில உலக சக்திகள் எல்லாமே விருதுநகரில் கேம்ப் போட்டிருப்பதாகக்கூட வைகோ சொல்வார்.
குஜராத்தைவிட முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு என்று ஜெயலலிதா சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
கடந்த 47 வருடங்களில் திமுக-வும் அதிமுக-வும் போட்டிபோட்டுக் கொண்டு ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை தந்திருப்பதை மறுக்க முடியாது. இருவருமே பணம் சம்பாதிப்பதற்காக தவறான வழிகளை கையாண்டிருக்கலாம். அதுவேறு விஷயம். ஆனால் தமிழகம் கண்டிருக்கும் வளர்ச்சி குஜராத்தில் நிச்சயமாய் இல்லை.
கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் இடதுசாரிகள் செங்கொடி போராட்டங்களில் சமரசம் செய்துகொண்டார்கள் என்கிறார்களே?
இப்படிச் சொல்பவர்கள் இந்த நாட்டில் தான் இருக்கிறார்களா என்று எனக்கு சந்தேக மாய் இருக்கிறது. தமிழகத்தில் நாங்கள் போராட்டம் நடத்தாத நாட்களே இல்லை.
தேர்தலுக்குப் பிறகு பாஜக-வை அதிமுக-வும் காங்கிரஸை திமுக-வும் ஆதரிக்கலாம் என்கிறார்களே?
என்ன காரணமோ தெரியவில்லை. மூன்று நாட்களாக பாஜக-வை அம்மையார் அவர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இது நிலையான கொள்கையாக தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களில் எதுவும் நடக்கலாம். திமுக-வை பொறுத்தவரை பாஜக பக்கம் சாயமாட்டார்கள். பதவிக்காக காங்கிரஸை நிச்சயம் ஆதரிப்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT