Published : 25 Jan 2023 06:23 AM
Last Updated : 25 Jan 2023 06:23 AM
கோவை: கோவையைச் சேர்ந்த இளம்பெண், 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார்.
தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. பிரசவத்துக்கு பின்னர், உடல்நல பாதிப்புகள் காரணமாக சில தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்காத நிலை ஏற்படுகிறது.
அதேபோல, பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பதால் தனிமையில் வாடும் குழந்தைகள், ஆதரவின்றி மீட்கப்படும் தொட்டில் குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் ஆகியோருக்கும் தாய்ப்பால் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற இடர்பாடுகளைத் தவிர்க்க அரசு சார்பில் தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை அறிந்திருந்தாலும், சில தாய்மார்கள் தானம் அளிக்க முன்வருவதில்லை.
இந்நிலையில், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக கோவை பி.என்.புதூரைச் சேர்ந்த வித்யா(27) என்பவர், கடந்த 10 மாதங்களாக அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்காக தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்.
இதுதொடர்பாக ஸ்ரீவித்யா கூறியதாவது: எனது கணவர் பைரவன். எங்களுக்கு அசிந்த்யா (4) என்ற மகனும், ப்ரக்ருதி(10 மாதம்) என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் பிறந்தபோதே, தாய்ப்பால் தானம் திட்டம் குறித்து அறிந்திருந்தாலும் அப்போது தானம் செய்ய முடியவில்லை. அரசு மருத்துவமனைகளில் தினமும் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றனர். அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் குறைந்த எடையிலும், உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையிலும் பிறந்திருப்பர்.
இதுபோன்ற குழந்தைகளுக்கு அவர்களது தாயாரால் நேரடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. எனவே, தாய்ப்பால் கிடைக்காத பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் அளிக்க முடிவு செய்தேன்.
திருப்பூரை சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர் நடத்திவரும் அமிர்தம் பவுண்டேசன் மூலமாக, தாய்ப்பால் தானத்தை சமூகசேவை அடிப்படையில் அளித்து வருகிறேன். எனது மகள் பிறந்த 5-வது நாளில் தாய்ப்பால் தானம் கொடுக்கத் தொடங்கினேன். அதிலிருந்து 7 மாத காலத்தில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளேன். தற்போது 10 மாத காலத்தில் 135 லிட்டருக்கு மேல் தாய்ப்பால் தானம் செய்துள்ளேன்.
தினமும் குழந்தைக்கு அளித்தது போக, மீதம் உள்ள தாய்ப்பாலை அதற்கு என பிரத்யேகமாக உள்ள பாக்கெட்டில் சேகரித்து, குளிர்சாதன இயந்திரத்தில் வைத்து விடுவோம். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தன்னார்வலர்கள் மூலமாக சேகரித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அளிக்கப்படும்.
அங்கு தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் ‘கப்’ மூலமாகவும், டியூப் மூலமாகவும் தேவையான குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது. தாய்ப்பால் தானத்துக்காக ‘இந்தியன் புக் ஆஃப் அன்ட் ஆசியன் புக் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் பாராட்டு சான்றிதழ், விருதும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT