Published : 25 Jan 2023 04:03 AM
Last Updated : 25 Jan 2023 04:03 AM

சேறும், சகதியும் தேங்கி மின் உற்பத்திக்கு சிக்கல்: குந்தா அணையை தூர்வார புதிய திட்டம்

மஞ்சூர்: சகதி தேங்கி மின் உற்பத்திக்கு சிக்கல் நிலவுவதால், குந்தா அணையை தூர்வார ரூ.20கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குந்தா மின் வட்டத்துக்கு உட்பட்ட குந்தா அணை, 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 89 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் மூலமாக கெத்தை, பரளி, பில்லூர் மின் நிலையங்களுக்கு ராட்சத குழாய்கள் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, தினமும் 515 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.

முக்கிய அணையாக கருதப்படும் குந்தா அணைக்கு தண்ணீர் வரும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தேயிலை, மலை காய்கறி தோட்டங்கள் உள்ளன. பருவமழைக் காலங்களில் அந்த வழியாக அடித்துவரப்படும் சேறு, சகதி, மரத்துண்டுகள், தாவரங்கள் உள்ளிட்ட கழிவுகள், அணையில் வந்து சேகரமாகின்றன.

இந்நிலையில், அணை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து சுமார் 60 ஆண்டு காலமாக தூர் வாரப்படாததால், மொத்த நீர்மட்ட உயரத்தில் சுமார் 40 அடிக்கு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும், சுமார் 5 டன் அளவுக்கு விறகுகள் மட்டும் இருக்கலாம் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது.

ராட்சத குழாய்கள் மூலமாக மற்ற அணைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யும்போது, வழக்கமான மின் உற்பத்தி செய்ய முடியாமல் தொய்வு ஏற்படுகிறது. இதனால் அணையை தூர்வாரி புதுப்பிக்க கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, கடந்த காலங்களில் உலக வங்கி மூலமாக ரூ.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அணையை தூர்வாரி, கழிவுகளை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள குந்தா மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் கொட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் குறிப்பிட்ட பகுதி சதுப்பு நிலக் காடுகள் வகையறாவுக்குள் வருவதால், கழிவுகளை கொட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அந்த திட்டம் கைவிடப்பட்டதுடன், ஒதுக்கப்பட்ட பணம் மீண்டும் உலக வங்கிக்கே திருப்பி அனுப்பப்பட்டது. எனவே, தற்போது புதிய முறையில் கழிவுகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக குந்தா மின்வாரியத்தினர் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, "பொக்லைன் மற்றும் கிரேன் வாகனங்கள் மூலமாக கழிவுகளை அகற்றி, கனரக வாகனங்கள் மூலமாக அருகில் உள்ள மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் கொட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சதுப்புநில காடுகள் உள்ள அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அதற்கு ரூ.6 கோடி வரை செலவாகும். மேலும் கனரக வாகனங்கள் மூலமாக சேறு, சகதி கொண்டு செல்லப்படுவதால் சாலை சேதமாகும். நெடுஞ்சாலை துறைக்கும் ரூ.5 கோடி வரை பணம் ஒதுக்க வேண்டியிருந்தது. எனவே, அந்த திட்டத்தில் மாற்றம் செய்து, தற்போது செலவுகளை குறைக்கும் வகையில் புதிதாக திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி,நேரடியாக அணையில் இருந்து கழிவுகள் உறிஞ்சப்பட்டு, உபரி நீர் வெளியேறும் பகுதி வழியாக கடத்தப்படும். இதற்கு ரூ.20 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு, மத்திய நீர்வள ஆணையம் மூலமாக உலக வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், டெண்டர் விடப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x