Published : 18 Dec 2016 11:12 AM
Last Updated : 18 Dec 2016 11:12 AM
'வார்தா' புயலால் ஏற்பட்ட பலத்த காற்று, மழையால் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து ஆயிரக்கணக்கான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இவ்வாறு பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு எவ்வாறு இழப்பீடு பெறுவது என்பது குறித்து காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
வாகனங்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களில் முழுக் காப்பீடு (‘காம்ப்ரஹன்சிவ்’), 3-வது நபர் காப்பீடு என இரு வகைகள் உள்ளன. 3-வது நபர் காப்பீடு என்பது அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் ஆகும். முழுக் காப்பீடு செய்வது என்பது காப்பீடு செய்பவரின் விருப்பத்துக்கு உட்பட்டது. 3-வது நபர் காப்பீட்டின் மூலம் வாகனம் மோதி யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அவருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும். காப்பீடு எடுத்தவருக்கு இழப்பீடு கிடைக்காது. முழுக் காப்பீடு செய்திருந்தால் மட்டுமே சாலை விபத்து, தீ விபத்து, புயல், வெள்ளம், நிலநடுக்கம், திருட்டு ஆகியவற்றின்போது வாகன உரிமையாளர் இழப்பீடு கோர முடியும்.
முழுக் காப்பீடு செய்துள்ளவர்கள் எவ்வாறு இழப்பீடு கோருவது என்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவன கிளை மேலாளர் எம்.ரவி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
புயலால் பாதிக்கப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் முதலில் வாகனம் எவ்வாறு சேதமடைந்தது என்பது குறித்து பாலிசி எண்ணைக் குறிப்பிட்டு செல்போன் அல்லது மின்னஞ்சல் மூலமாக, நேரிலோ காப்பீட்டு நிறுவனத்தை தொடர்புகொண்டு தெரியப்படுத்த வேண்டும். பின்னர், வாகனத்தை அருகில் உள்ள பழுதுபார்க்கும் நிலையத்துக்கு கொண்டுசென்று தோராய சேத மதிப்பை பெற வேண்டும்.
பின்னர், தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் வாகனம் இருக்கும் இடத்துக்கு வந்து சேதங்கள் குறித்து ஆய்வு செய்வார். ஒருவேளை, வாகனத்தை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கான கட்டணத்தையும் (டோயிங் சார்ஜ்) காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.
மதிப்பீட்டாளர் சேத அறிக்கை வழங்கியதும், வாகனம் தயாரிக்கப்பட்ட ஆண்டு, வகையைப் பொருத்து தேய்மானச் செலவு போக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இதில், வாகனத்தின் பிளாஸ்டிக் பாகங்களுக்கு 50 சதவீத இழப்பீடு மட்டுமே கிடைக்கும். உடைந்துபோன கண்ணாடிகளுக்கு முழு இழப்பீடு கிடைக்கும். உலோக பாகங்களுக்கு ஆண்டைப் பொருத்து இழப்பீடு வழங்கப்படும். வாகனத்தின் பாகங்களைப் பொருத்துதல், கழற்றுதல் உள்ளிட்டவற்றுக்கான கட்டணம் (லேபர் சார்ஜ்) முழுவதுமாக வழங்கப்படும்.
செய்ய வேண்டியவை என்ன?
சேதமடைந்த வாகனம் பாதிப்புக்குள்ளாகும்போது எந்த நிலைமையில் உள்ளதோ, அந்த நிலைமையில் புகைப்படம் எடுத்து வைத்திருப்பது நல்லது. இழப்பீடு கோரும்போது, வாகனம் எப்படி சேதமடைந்தது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரத்துக்காக அந்தப் புகைப்படம் தேவைப்படும். கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த வாகனங்களுக்கு 6 மாதங்களுக்கு பிறகுகூட பலர் இழப்பீடு கோரினர். அவ்வாறு, இழப்பீடு கோரும்போது இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, காப்பீட்டு நிறுவனத்திடம் வாகனத்தின் சேதம் குறித்து தகவல் தெரிவிக்க தாமதப்படுத்தக் கூடாது. அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் தகவல் தெரிவிப்பது நல்லது. வெளியூரில் இருந்தாலும், தொலைபேசி மூலமாவது சேதம் குறித்துத் தெரிவிக்க வேண்டும். மேலும், காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்காமல் சுயமாக செலவு செய்து வாகனத்தை பழுதுபார்க்கக் கூடாது. அப்படி செய்தால், பின்னர் இழப்பீடு கோர முடியாது.
விழிப்புணர்வு இல்லை
வாகனக் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. போலீஸாரின் நிர்ப்பந்தம் காரணமாகவே பலர் காப்பீடு செய்து வருகின்றனர். இன்னும் பலர் காப்பீடு செய்த பிறகு அதைப் புதுப்பிப்பதில்லை. கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புக்குப் பிறகும் முழு காப்பீடு செய்வோரின் எண்ணிக்கை கணிசமான அளவே அதிகரித்துள்ளது. பாதிப்பு ஏற்பட்ட பிறகே மக்கள் வருந்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT