Published : 24 Jan 2023 03:30 PM
Last Updated : 24 Jan 2023 03:30 PM
புதுடெல்லி: 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கடற்பரப்பில் பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் 'சுருக்கு மடி வலையைக்' கொண்டு மீனவர்கள், மீன் பிடிக்க தடை விதித்து கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்தநிலையில், மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு, 'சுருக்கு மடி வலையைக்' கொண்டு மீன் பிடிக்கலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டு பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையின்படி, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள்ளான கடற்பரப்பில் சுருக்கு மடி வலையைக் கொண்டு மீன்பிடிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி தடை விதித்து உத்தரவிட்டு, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில், சுருக்குமடி வலையை 12 நாட்டிக்கல் சுற்றளவுக்குள் பயன்படுத்த அனுமதிக்க கோரியும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சுருக்குமடி வலையைக் கொண்டு செல்ல அனுமதிக்க கோரியும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு சுருக்குமடி வலையை பயன்படுத்திவிட்டு கரைதிரும்பும் மீனவர்களை எந்தவிதமான தொந்தரவும் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில்மனுவில், "இயற்கை வளங்களைப் பேணிக்காக்கவும், பாரம்பரிய மீன்பிடித் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் மாநில அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியது இல்லை" என்று தெரிவித்திருந்தது.
சுருக்குமடி வலைக்கு ஆதரவு தெரிவிக்கும் மீனவர்கள் சார்பில், "மத்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரையில், இந்த வலையைப் பயன்படுத்துவதால் கடல் வளம், மீன் வளம் பாதிக்கப்படும் என்ற எந்த தகவலும் இல்லை. எனவே சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் ஆவது இந்த வலைகளைப் பயன்படுத்த தமிழக கடற்பரப்பு எல்லைகளைப் பயன்படுத்தி வலைகளைக் கொண்டுச் செல்ல அனுமதிக்க வேண்டும்" என்று வாதிப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா தலைமையிலான அமர்வு இன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவு: 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் எடுத்து செல்ல அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம்.இந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து விட்டு படகுகள் கரைதிரும்ப வேண்டும்
மேலும், பதிவு செய்யப்பட்ட படகுகளுக்கு மட்டுமே சுருக்குமடி வலையை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்.அதேபோல, இந்த படகுகளை கண்காணிக்க உரிய கண்காணிப்புக் கருவியைப் பொருத்தி இருக்க வேண்டும்.மேல், சொன்ன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தமிழக அரசு அதன் வரம்புக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில் தமிழகத்தில் 12 நாட்டிக்கல் மைலுக்கு உட்பட்ட கடல் பகுதியில் சுருக்கு மடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதித்த தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை தொடர்பான விவகாரத்தில் தற்போதைய நிலையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT