Published : 23 Jan 2023 03:24 PM
Last Updated : 23 Jan 2023 03:24 PM
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது. தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தேமுதிக தொடங்கியது முதல் தற்போது வரை அனைத்து இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளோம். சில நேரங்களில் கூட்டணிக்கு விட்டுக் கொடுத்துள்ளோம். தற்போது தேமுதிக எந்தக் கூட்டணியிலும் இல்லை. 2011-ம் ஆண்டு தேமுதிக வென்ற தொகுதி ஈரோடு கிழக்குத் தொகுதி.
இடைத்தேர்தலை இவ்வளவு சீக்கிரம் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் இறந்த சுவடு கூட மறையவில்லை. அதற்குள் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் 3 மாதத்திற்கு பிறகு இந்த இடைத் தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அறிவித்தது, அறிவித்தது தான். எனவே தேமுதிக தனித்து களம் காண்கிறது.
பாஜக இன்னும் நிலையை அறிவிக்கவில்லை. அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து உள்ளன. அவர்களுக்கு சின்னம் உள்ளதா, இல்லையா என்ற கேள்வி உள்ளது. அவர்களும் நிலையை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தேமுதிக தனித்து களம் காண்கிறது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...