Published : 23 Jan 2023 03:44 PM
Last Updated : 23 Jan 2023 03:44 PM

சசிகலாவுக்கு எதிரான இபிஎஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சசிகலா | கோப்புப்படம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்து நீக்கியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கு தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில், வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சசிகலாவின் மேல் முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில், பதிவுத்துறையில் சரிபார்த்த பிறகு தான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செம்மலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x