Published : 23 Jan 2023 02:54 PM
Last Updated : 23 Jan 2023 02:54 PM
சென்னை: "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்த விஷயத்தில் நான் மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. எனவே, நாங்கள் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். லாபத்தைப் பற்றி நினைக்காமல் மக்களுக்கு எது நல்லது பயக்கும் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம்" என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திங்கள்கிழமை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இதன்பின்னர் செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது அவரிடம், ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உங்களைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார், மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன?’ என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், "இது தொடர்பான நிலைப்பாடை எடுப்பதற்காகத்தான் இப்போது கட்சி நிர்வாகிகள் இங்கு கூடியிருக்கிறோம். எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் அவர்களுடன் கலந்தாலோசித்து எங்களுடைய நிலை என்ன என்பதை கண்டிப்பாக உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இது தொடர்பாக நாங்கள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிலவரம்" என்றார்.
அப்போது அவரிடம் ‘கமல்ஹாசன் வரவேற்ற விதமும், கை கொடுத்த விதமும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது’ என்று ஈவிகேஎஸ் கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "நம்பிக்கை எல்லோருக்குமே இருக்க வேண்டும். நான், இந்தக் கதவுக்குள் வருகின்ற அனைவருக்குமே எங்களைப் பொறுத்தவரை நல்ல வரவேற்பு இருக்கும். இந்த விஷயத்தில் நான் மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. எனவே, நாங்கள் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். லாபத்தைப் பற்றி நினைக்காமல் மக்களுக்கு எது நல்லது பயக்கும் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம். மேலும் நீங்கள் என்ன முடிவு என்று கேட்கிறீர்கள். அதை நான் அப்புறம் சொல்கிறேன் என்கிறேன்" என்றார்.
மநீம தனித்துப் போட்டியிட தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இல்லையே நான் இன்னும் ஏன் முடிவை சொல்லவே இல்லையே. அதற்கு முன்னாடி ஊடகவியலாளர்கள் கூட்டணியை முடிவு செய்கின்றனர், தயக்கத்தை உறுதி செய்கின்றனர். ஊடகங்களுக்கு செய்தி தேவை. எனக்கு தமிழகத்துக்கு முன்னேற்றம் தேவை" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT