Published : 23 Jan 2023 01:58 PM
Last Updated : 23 Jan 2023 01:58 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுக் கழிவறைகளிலும் க்யூ.ஆர் கோடு மூலம் கருத்து தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை QR Code அட்டைகள் பொருத்தப்பட்டுள்ள 7,954 கழிப்பறைகள் தொடர்பாக 1,25,906 பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்துள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களையும் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நகரங்களாக மாற்றுவது அரசின் முதன்மையான குறிக்கோளாகும். தமிழகத்தில் உள்ள நகரங்களில், பொது மற்றும் வணிகம் சார்ந்த இடங்களில், தமிழக அரசின் பங்களிப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 7,898 சமுதாயக் கழிப்பறைகள் மற்றும் 2,771 பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இது அனைவருக்கும் சுகாதார வசதிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கான அரசின் முதன்மை முயற்சியாகும்.
அனைத்து நகர்ப்புர உள்ளாட்சிகளிலும் உள்ள பொது மற்றும் சமுதாயக் கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அக்கழிப்பறைகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஒவ்வொரு கழிப்பறைக்கும் QR Code உருவாக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட கழிப்பறைகளில் பொருத்தப்பட்டு வருகின்றன.
கழிப்பறைகளில் உள்ள QR Code-ஐ ஸ்கேனிங் செய்து கழிப்பறை அமைந்துள்ள இடம் மற்றும் முகவரி, அலைபேசி எண் பதிவு செய்யும் முறை, தண்ணீர் வசதி முறையாக உள்ளதா?, கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா? கழிப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளதா? (ஆம்/இல்லை), தனிப்பட்ட கருத்து பதிவு செய்யும் முறை, கருத்து அல்லது புகார் தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் முறை, இறுதியாக சமர்ப்பித்தல் ஆகிய விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த QR Code விவரம் அடங்கிய சிறு அட்டை, அனைத்து பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளில் பொருத்தப்படவேண்டும் என திட்டமிடப்பட்டதன் முன்னோடியாக, இதுவரை 7,954 கழிப்பறைகளில் QR Code பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,715 கழிப்பறைகளில் QR Code பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இக்கழிப்பறைகளை பயன்படுத்தும் பொதுமக்கள், கழிப்பறைகளில் உள்ள வசதிகளின் நிலை மற்றும் குறைபாடுகள் குறித்து தங்களது கைப்பேசியில் QR Code ஐ ஸ்கேன் செய்து கருத்துக்களை பதிவு செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை QR Code அட்டைகள் பொருத்தப்பட்டுள்ள 7,954 கழிப்பறைகள் தொடர்பாக 1,25,906 பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் மற்றும் புகார்கள், சம்மந்தப்பட்ட நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளால் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக கழிவறைகளின் பராமரிப்பு மேம்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான கழிவறை வசதிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT