Published : 23 Jan 2023 11:49 AM
Last Updated : 23 Jan 2023 11:49 AM
சென்னை: “எதிரணி குழப்பத்தில் இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை இன்னும் தேர்வு செய்யவில்லை” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (ஜன.23) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கிய திமுகவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
யார் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று திமுக சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. வேட்பாளர் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு எடுக்கும். அதே நேரத்தில் திமுகவுடன் கலந்து பேசி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
மக்களுக்காக, காங்கிரஸ் கட்சிக்காக, திமுக கூட்டணிக்காக பணி செய்ய எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களை இன்று சந்தித்து விட்டு பிரசாரத்தை தொடங்குவேன். முதல்வர் பிரசாரத்திற்கு வருவார் என்று முழுமையான நம்புகிறேன். வெற்றி நிச்சயம் என்ற காரணத்தால் உடனடியாக திமுக தலைமையில் பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.
ஆனால், எதிர் அணியில் இருப்பவர்கள் மிகப் பெரிய குழப்பத்தில் உள்ளார்கள். அதனால் வேட்பாளரை இன்னும் தேர்வு செய்யவில்லை. கமல்ஹாசன் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோர உள்ளேன்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா கடந்த ஜன.4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலை தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18-ம் தேதி அறிவித்தது. அதன்படி, பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது.இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக காங்கிரஸ் தேசிய தலைமை நேற்று (ஜன.23) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT