Published : 23 Jan 2023 11:05 AM
Last Updated : 23 Jan 2023 11:05 AM
புதுக்கோட்டை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் அதற்கான வெற்றி வியூகத்தை அதிமுக வகுத்துள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் ஜி.கே.வாசன். அப்போது அவரிடம் அதிமுக பிளவுபட்டிருப்பது, இபிஎஸ் அணியினர், ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்தது, ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இது குறித்து ஜி.கே.வாசன், "கூட்டணியில் அதிமுக தான் பிரதான கட்சி. அந்தக் கட்சி ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி குறித்து ஒரு வியூகம் வகுத்துள்ளது. அதுபற்றியே ஆலோசித்தோம். அதிமுக இத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அதிமுக பல இடைத்தேர்தல்களை சந்தித்திருக்கிறது. நிறைய வெற்றிகளும் பெற்றிருக்கிறது. அதிமுகவின் வியூகம் வெற்றி வியூகம்.
இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் என்று நீங்கள் கேட்கிறீர்கள். நான் அரசியலில் எப்போதும் நல்லதையே நினைக்கிறேன். அதனால் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்று அந்த நம்பிக்கையில்தான் கூறுகிறேன். மேலும், திமுக ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால் அதிமுக வெற்றி பெறும்" என்றார்.
அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் இபிஎஸ் அணியினர் சார்பில் வாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி இடைத்தேர்தலில் கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளரை நிறுத்த சம்மதிப்பதாக வாசன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT