Published : 23 Jan 2023 06:40 AM
Last Updated : 23 Jan 2023 06:40 AM
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக காங்கிரஸ் தேசிய தலைமை அறிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த இவர் கடந்த ஜன.4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. இந்த நிலையில், மேகாலயா உள்ளிட்ட 3 மாநில தேர்தல் அறிவிப்புடன், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18-ம் தேதி அறிவித்தது. அதன்படி, பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது.
இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தீவிரமாக நடந்து வந்தது. தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டு, சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, சு.திருநாவுக்கரசர், தமிழக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வந்தார். அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தினேஷ் குண்டுராவ் அனுப்பி இருந்தார்.
தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடலாம் என கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘இளம் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு தர விரும்புகிறேன். நான் போட்டியிட விரும்பவில்லை. கட்சி விரும்பினால் என் இளைய மகனை நிறுத்துவேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகனான சஞ்சய் சம்பத் நேற்று காலை சென்னை சத்தியமூர்த்திபவனில் தினேஷ் குண்டுராவை சந்தித்து, இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை அளித்தார். அப்போது, இளங்கோவன், விஷ்ணு பிரசாத் எம்.பி., மாநில பொதுச் செயலாளர் எஸ்.காண்டீபன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜனும் விருப்ப மனு அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் தினேஷ் குண்டுராவ் கூறியபோது, ‘‘வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், காங்கிரஸாரும், திமுகவினரும் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். திமுக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் 100 சதவீதம் வெற்றி பெறுவார். அதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’’ என்றார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக காங்கிரஸ் தேசிய தலைமை அறிவித்துள்ளது.
கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் மாற்றம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் கேட்டபோது, ‘‘நடக்க இருப்பது இடைத்தேர்தல். இத்தேர்தலின் முடிவு, திமுக அரசின் கவுரவம் சார்ந்தது மட்டுமின்றி, ஆளும் திமுக ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பாகவே பார்க்கப்படும். மக்கள் செல்வாக்கு மிக்க ஒருவரை வேட்பாளராக நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. பாஜக போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது. போட்டியாளர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதால், ஈரோடு மாவட்டத்துக்கு மிகவும் பரிச்சயமான, அரசியல் அனுபவம் மிக்க மூத்த தலைவரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்து, ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதுவே முதல்வர் ஸ்டாலினின் விருப்பமாகவும் இருந்தது’’ என்றனர்.
‘‘எதிர்த்து பாஜக போட்டியிட்டாலும் நிச்சயம் வெற்றி பெறுவேன்’’ என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸில் படிப்படியாக உயர்ந்த இளங்கோவன், 2000-02 மற்றும் 2015-17ஆகிய காலகட்டங்களில் மாநிலத் தலைவராக பதவி வகித்தார்.
கடந்த 1984-ல் சத்தியமங்கலம் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ல் கோபி மக்களவை தொகுதி எம்.பி.யாகி, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.
2009-ல் ஈரோடு, 2014-ல் திருப்பூர், 2019-ல் தேனி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT