Published : 23 Jan 2023 06:08 AM
Last Updated : 23 Jan 2023 06:08 AM
சென்னை: பபாசியின் சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த ஆண்டு ரூ.16 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 46-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் கடந்த ஜனவரி 6-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டுபதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்த 24 பேருக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தகக் காட்சியை 15 லட்சம் வாசகர்கள் பார்வையிட்டுள்ளனர். புத்தக விற்பனையும் ரூ.16 கோடி வரை நடைபெற்றதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர். நடப்பாண்டு குழந்தைகளுக்கான சிறுகதைகள், சரித்திரநாவல்கள், வரலாற்று நூல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாகக் கண்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாகப் பங்கேற்க முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத்தாளர்கள், தமிழர்கள் எனப் பலரும் இந்தாண்டு மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
கண்காட்சியின் சிறப்பம்சமாகத் திருநங்கையர் நடத்தும் பதிப்பகத்துக்கும், தமிழக சிறைத் துறைக்கும் தலா ஓர் அரங்கம் ஒதுக்கப்பட்டது. இதில்சிறைத் துறைக்கான அரங்கத்தில் வாசகர்கள் தானம் வழங்கியதன் மூலமாகத் தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலை நூலகங்களுக்காக சுமார் 22 ஆயிரம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன.
எனினும், மற்ற மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுவதால் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனவும் சில பதிப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், இதனுடன் சேர்த்து நடத்தப்பட்ட தமிழக அரசின் சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியும் வெற்றிகரமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT