Published : 22 Jan 2023 04:51 AM
Last Updated : 22 Jan 2023 04:51 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டி உறுதி - கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார் ஓபிஎஸ்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஓரிருநாளில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். அதேபோல, அதிமுக கூட்டணியில் பழனிசாமி தரப்புபோட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆதரவைக் கோரும் பணிகளை மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துவிட்டது. டிடிவி தினகரன் வரும் 27-ம் தேதி தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. நான் ஒருங்கிணைப்பாளராகவும், பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் 2026-ம் ஆண்டு வரை செயல்படலாம் என்ற அங்கீகாரத்தை தொண்டர்கள் வழங்கியுள்ளனர்.

எங்களுக்கு முழு உரிமை: எனவே, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழுஉரிமை இருக்கிறது. அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கோரி ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவத்தில் கையெழுத்திடுவேன். அதில் பழனிசாமி கையெழுத்திடுவது அவரது விருப்பம்.

ஒற்றைத் தலைமை தொடர்பானவழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் டெல்லியில் நடத்திய கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் பங்கேற்றேன்.

உள்ளாட்சி இடைத்தேர்தலின்போது அதிமுக வேட்பாளருக்கு தலைமைக் கழக நிர்வாகி மூலம், படிவங்களில் கையெழுத்திட்டு அனுப்பினேன். அதில் பழனிசாமி கையெழுத்திடவில்லை. அதனால் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியவில்லை. எனவே, அதற்கு நான் காரணமில்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, பாமக, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து, ஆதரவு கேட்க உள்ளோம். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எங்களிடமும் பேசி வருகின்றனர்.

அதேநேரத்தில், இந்த தேர்தலில் பாஜக போட்டியிட்டு, என்னிடம் விருப்பம் தெரிவித்தால், நிச்சயம் ஆதரவளிப்போம்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலில்தான் திமுக ஆட்சி செய்து வருகிறது. எனவே, இடைத்தேர்தலில் அதிமுகநிச்சயம் வெற்றிபெறும்.

இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு எந்த சூழலிலும் நான் காரணமாக இருக்கமாட்டேன். இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம்.

சின்னம் முடக்கப்படக் கூடாதுஎன்பதற்காகத்தான் அனைவரும் இணைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கட்சியில் குழப்பத்தை உருவாக்கியது நாங்கள் கிடையாது. பிரிந்து கிடக்கும் அதிமுக தொண்டர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எனவே, பேச்சுவார்த்தைக்கு நான் தயாராக இருக்கிறேன். எம்ஜிஆர் வகுத்த சட்ட விதிகள் செல்லும் என்று தீர்ப்பு வரும் வரை சட்டப் போராட்டம் தொடரும்.

தொண்டர்கள், மக்கள் எங்கள் பக்கம்: இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலையை இந்த தேர்தலில் முறியடிப்போம். கட்சித் தொண்டர்களும், மக்களும் எங்கள் பக்கம் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ உடனிருந்தனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இல்லத்தில் அவரை சந்தித்து ஆதரவு கோரினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x