Published : 21 Jan 2023 04:41 PM
Last Updated : 21 Jan 2023 04:41 PM
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம், பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்துப் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.
அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துள்ளது. வேட்பாளர் தொடர்பாக அதிமுக சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவோம்; பாஜக போட்டியிட விரும்பினால் விட்டுத்தருவோம் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வருகிறார். இன்று (ஜன.21) மாலை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT