Published : 21 Jan 2023 04:02 PM
Last Updated : 21 Jan 2023 04:02 PM
தஞ்சாவூர்: திருமண்டங்குடியில் 53-நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கும்பகோணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்த நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் 53-வது நாளான இன்று , விவசாயிகள் மெளன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் என்.கணேசன் மற்றும் திருப்பனந்தாள் ஒன்றியத் தலைவர் பி.கலைமணி தலைமை வகித்தனர்.
ஒன்றியப் பொருளாளர் ஜி.பாக்கியராஜ், திருவள்ளூவர் விவசாயச் நலச் சங்க நிர்வாகி ஆர்.சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினர் பழ. அன்புமணி மற்றும் ஏராளமானோர் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகள் அறிவித்த கருப்பிற்கான முழுத் தொகையையும் வட்டியுடன் வழங்கவும், திருமண்டங்குடி சர்க்கரை ஆலையில் போராடி வரும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT