Published : 21 Jan 2023 03:15 PM
Last Updated : 21 Jan 2023 03:15 PM
சென்னை: நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒருமாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதல்வரிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (21.01.2023) , பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் 19.12.2022 அன்று “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்தைத் தொடங்கி வைத்து, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடக் கோரியும் கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விழாவிலேயே ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
இந்தக் கோரிக்கைகயை ஏற்று, பல்வேறு அமைப்பினர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தினை “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்காக வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர் பி. அப்துல் சமது ஆகியோரும் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா, எம். பூமிநாதன், டாக்டர் டி.சதன் திருமலைகுமார், ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோரும் தங்களது ஒருமாத ஊதியத்திற்கான காசோலைகளையும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT