Published : 21 Jan 2023 02:55 PM
Last Updated : 21 Jan 2023 02:55 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், தோட்டக்காடு ஊராட்சி நெடார் ஆலக்குடி கிராமத்தில் சுமார் 200 குடும்பத்தினர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தொழில் செய்து வருகின்றனர்.
இங்குள்ளவர்களில் யாராவது உயிரிழந்தால், சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வயல்களின் வழியாக நடந்து சென்று தகனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமதாஸ் மனைவி ராஜேஸ்வரி (70), உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரை தகனம் செய்வதற்காக, நேற்று மாலை, வயல்களில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்கதிர்கள் வழியாகத் தூக்கி சென்றனர். இதனால், இவர்கள் சென்ற இடத்திலுள்ள நெற்கதிர்கள் சாய்ந்தும், மிதிப்பட்டும் வீணானது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகாரளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், உயிரிழந்தவர்களை நிம்மதியாகத் தூக்கிச் சென்று, தகனம் செய்யும் வகையில், அருகிலுள்ள வெட்டாற்றின் கரையிலேயே இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என அக்கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறியது, “இங்குள்ளவர்கள் உயிரிழந்தால், வயல்களில் சாகுபடி செய்யாத போது, அதன் வழியாக தூக்கிச் சென்று விடுவோம். சாகுபடி செய்திருந்தால், வயல்களிலுள்ள நெற்கதிர்களை மிதித்தும், சாய்த்தும், அதிலுள்ள சேரும் சகதியில் உடலைத் தூக்கி கொண்டு நடந்து செல்ல வேண்டும். இதனால் அதனைத் தூக்கிச் செல்பவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி விடுவார்கள். இது போன்ற நிலை சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இந்த ஊருக்கான சுடுகாட்டிற்கு செல்ல சாலை அமைக்க முடிவு செய்த போது, சிலர் சாலை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், இந்த ஊரின் தென்திசையிலுள்ள வெட்டாற்றின் கரையில் சுடுகாடு அமைத்து தரவேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT