Published : 21 Jan 2023 04:03 AM
Last Updated : 21 Jan 2023 04:03 AM

சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி துறையில் 130 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை - முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவர்களுக்கு உதவி மருத்துவ அலுவலர் பணிக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 1,541 சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுகள் உள்ளன. கரோனா தொற்றின்போது, சித்தா மருத்துவப் பிரிவுகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கரோனா 2-ம் அலையின்போது, 79 சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு, சுமார் 70 ஆயிரம் மக்கள் பயனடைந்தனர்.

2 மையங்களில் தேர்வுகள்: இந்த நிலையில், இந்திய மருத்துவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகங்களில் இப்பிரிவுகளில் காலியாக உள்ள உதவி மருத்துவ அலுவலர்கள் (ஆயுஷ்) பணியிடங்களை நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. சென்னையில் 2 மையங்களில் இதற்கான தேர்வுகள் நடந்தன.

அதன்படி, தேர்வு செய்யப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவர்களுக்கு உதவி மருத்துவ அலுவலர் பணிக்கான நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 15 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு, துறை செயலர் செந்தில்குமார், மருத்துவத் தேர்வு வாரிய தலைவர் ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x