Published : 21 Jan 2023 04:57 AM
Last Updated : 21 Jan 2023 04:57 AM
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துள்ளது. அத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கே வாய்ப்பு அளிக்கலாமா அல்லது அவரது குடும்பத்தாரை நிறுத்தலாமா என தேசிய தலைமையுடன் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதிமுக - தமாகா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமாகாவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக எம்.யுவராஜா போட்டியிட்டார். தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்குதொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்னை கட்சி தலைமை அலுவலகத்தில் 19-ம் தேதி சந்தித்து, இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தமாகாவின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசிக்கப்பட்டு, தற்போதைய அரசியல் சூழலில், அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை தமாகா ஏற்றுக்கொண்டது. தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பழனிசாமி ஆலோசனை: இதற்கிடையே, இடைத்தேர்தலில் அதிமுகவில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பழனிசாமியின் இல்லத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, கருப்பணன், வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக யாரை தேர்வு செய்வது மற்றும் வெற்றிவாய்ப்பு குறித்து2 மணி நேரத்துக்கு மேலாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அந்த மாவட்டத்தில் நன்கு பரிச்சயமானவரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கத்தை நிறுத்தினால் திமுக கூட்டணி வேட்பாளருக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.
அதிமுக நிர்வாகிகள் இன்று மாலை பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
தற்போதைய சூழலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தை நாடி, சின்னத்தை பெறுவது குறித்தும் பழனிசாமி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்ற அமர்வு, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிதான். வேட்பாளருக்கு கட்சி அங்கீகாரம், சின்னம் வழங்கும் அங்கீகாரம் பெற்றவராக பழனிசாமிதான் இருக்கிறார். அதனால் இரட்டை இலை சின்னம் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை’’ என்றனர்.
ஓபிஎஸ் இன்று முக்கிய அறிவிப்பு: இதற்கிடையில், இத்தேர்தலில் ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 8 மணிக்கு இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பதாக, அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது நிலைப்பாட்டை 27-ம் தேதி அறிவிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT