Published : 27 Dec 2016 12:50 PM
Last Updated : 27 Dec 2016 12:50 PM
கோவையில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்கு நிரந்தர உரிமம் கிடைக்கும் வகையில், ஓடுதள விரிவாக்கம் உள்ளிட்டத் திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுப்பெற்று வருகிறது.
இந்தியாவின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றான கோவையில் விமானப் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு 1940-ம் ஆண்டுகளில் விமான சேவை தொடங்கியது. 1980-ல் ஓடுபாதை விரிவாக்கப் பணிகளுக்காக விமானநிலையம் மூடப்பட்டது. விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு 1987-ல் மீண்டும் கோவை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டன. 1995-ல் பன்னாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. 2012-ம் ஆண்டில் இது சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது இந்த விமானநிலையத்திலிருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தினமும் சுமார் 20 விமானங்கள் இயக்கப்படுகின்றன. கோவை, சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விமானநிலையத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து, செல்கின்றனர்.
எனினும், பெரிய அளவிலான சரக்கு விமானங்கள் இங்கு வந்து செல்வதில்லை. கோவை, திருப்பூரிலிருந்து மோட்டார் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள், நகைகள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவையில் சரக்கு விமான சேவையை அதிகரித்தால், ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
தற்காலிக உரிமம்
இங்கு ஓடுதள விரிவாக்கம் உள்ளிட்ட வசதிகளை செய்வது அவசியம் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து விமானநிலைய மேம்பாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினரும், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் முன்னாள் தலைவருமான டி.நந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறியது: விமானநிலையத்திலிருந்து விமானங்கள் புறப்பட்டுச் செல்ல உள்ளாட்டு விமானப்போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் (Director General of Civil Aviation) அலுவலகம் உரிமம் வழங்க வேண்டும். கோவை விமானநிலையத்தைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கும் தற்காலிக உரிமம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு மார்ச் 31-ம் தேதியுடன் தற்காலிக உரிமம் முடிவடைகிறது. அதற்குப் பிறகு மீண்டும் தற்காலிக உரிமம் பெற்று, விமானத்தை இயக்குவார்கள். எனினும், ஓடுபாதை விரிவாக்கம் உள்ளிட்ட வசதிகளைச் செய்தால், நிரந்தர உரிமம் பெற முடியும்.
12,500 அடி நீள ஓடுபாதை
கோவை விமானநிலையத்தின் ஓடுதள பாதை, பெரிய அளவிலான சர்வதேச விமானங்கள் வந்து செல்லக்கூடிய அளவுக்கு இல்லை. தற்போதுள்ள ஓடுபாதையில் ஏ.டி.ஆர். ரக விமானங்களை மட்டுமே இயக்க முடியும். சர்வதேச அளவிலான பெரிய விமானங்களை இயக்க இந்த ஓடுபாதை போதுமானதாக இருக்காது. எனவே, தற்போது 9 ஆயிரம் அடி நீளத்துக்கு உள்ள பாதையை, 12,500 அடி நீளத்துக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும்.
2010-ம் ஆண்டிலேயே விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய இந்திய விமானநிலைய ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, நிலத்தை கையகப்படுத்தும் பணிகளுக்கான உத்தரவும் மத்திய, மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, நிலத்தை கையகப்படுத்தும் பணியை கோவை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. எனினும், நிலங்களை கொடுப்பவர்களுக்கு வழங்கக் கூடிய இழப்பீட்டுத் தொகை தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால், இந்தப் பணி தொடரப்படவில்லை.
விமானநிலையத்தின் மேம்பாட்டுக்கு 627 ஏக்கர் தேவை. இரு கட்டங்களாக இந்த நிலத்தைக் கையகப்படுத்தி, முதல் கட்டத்தில் ஓடுதள விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம். அதன் மூலம் விமானநிலையத்துக்கு நிரந்தர உரிமம் கிடைத்துவிடும். அடுத்த கட்டத்தில், விமானநிலைய விரிவாக்கப் பணிகள், தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தல், எல் அண்டு டி பைபாஸ் சாலையை 200 அடி சாலையாக மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.
நில ஆர்ஜித பணிகள்
இப்பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான 140 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும், அரசுக்குச் சொந்தமான 30 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இவற்றை கேட்டுப் பெற்றால், மீதமுள்ள 457 ஏக்கர் நிலத்தை மட்டும் ஆர்ஜிதம் செய்ய வேண்டும். இது தொடர்பாக நில உரிமையாளர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, நிலத்தை ஆர்ஜிதம் செய்ய வேண்டும். நில ஆர்ஜிதப் பணிகளுக்கான மாவட்ட வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும்.
கூடுதல் விமானங்கள் தேவை
தற்போது சில நாடுகளுக்கு மட்டுமே கோவை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. நேரடியாக துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்க வேண்டும். அங்கிருந்து எந்த நாடுகளுக்கு வேண்டுமானாலும் எளிதில் செல்லமுடியும். கோவையைவிட சிறிய நகரங்களில் உள்ள விமானநிலையங்களில் இருந்துகூட அதிக விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் ஏராளமானோர் திருச்சி, சென்னை, கொச்சின், பெங்களூரு உள்ளிட்ட விமானநிலையங்களுக்குச் சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இதனால் கோவை விமானநிலையத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதிக விமானங்களை இயக்குவதால், ஐ.டி. தொழில் நிறுவனங்கள், மருத்துவச் சுற்றுலா உள்ளிட்டவையும் வளர்ச்சியடையும். மேலும், கோவை சர்வதேச விமானநிலையத்துக்கு திருவள்ளுவர் பெயரை சூட்ட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளோம்.
இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அமைச்சர்களிடம் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். கோவையின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, விமானநிலையத்தின் மேம்பாட்டில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
நிலம் கிடைத்தவுடன் பணி தொடங்கும்
இதுகுறித்து விமானநிலைய இயக்குநர் ஜி.பிரகாஷ் ரெட்டி கூறும்போது, “தற்போது விமான நிலையத்தின் வெளிப் பகுதியில், பயணிகளுக்கு நிழல் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, குடை வடிவிலான மேற்கூரையை அகற்றிவிட்டு, இன்னும் அதிக பரப்பில், பெரிய அளவில் புதிய மேற்கூரை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகள் படிக்கட்டுகள் வழியாக இறங்காமல், நேரடியாக விமான நிலையத்துக்குள் வரும் ஏரோபிரிட்ஜ்ஜுகளும் மேலும் 2 கட்டப்படவுள்ளன.
மேலும், கூடுதலாக 2 விமான நிறுத்துமிடங்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ரூ.11 கோடி மதிப்பிலான இப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்.
விமான நிலையம் தற்போது 420 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. மாநில அரசு கூடுதலாக 627 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்துகொடுத்தால், ஓடுதள விரிவாக்கம் மற்றும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய இந்திய விமானநிலைய ஆணையம் தயாராக உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT