Published : 12 Dec 2016 09:03 AM
Last Updated : 12 Dec 2016 09:03 AM
‘சரித்திரம் திரும்புகிறது’…. இந்த வார்த்தைகள் எதற்கு பொருந்து கிறதோ இல்லையோ? அதிமுக வுக்கு கச்சிதமாகப் பொருந்தும். கடந்த மே மாதம் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பின், 32 ஆண்டுகள் கழித்து தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை அதிமுக கைப்பற்றியதன் மூலம் ‘சரித்திரம் திரும்புகிறது’ என்று கூறப்பட்டது.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அதிமுக வுக்கு அடுத்த தலைவர் யார்? கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்தப் போவது யார்? என்ற கேள்வி எழுந்தது. இப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அதிமுக வில் மீண்டும் அதே சரித்திரம் திரும்பியிருக்கிறது!
எம்.ஜி.ஆர். இறந்தபோதும் இதுபோல இக்கட்டான சூழலை கட்சி எதிர்கொண்டது. அப்போது கட்சிக்குள் வெளிப்படையாகவே இரண்டு கோஷ்டிகள் கொடி தூக் கின. ஒரு கோஷ்டிக்கு தலைவர் ஜெயலலிதா, இன்னொரு கோஷ்டிக்கு தலைவர் ஜானகி எம்.ஜி.ஆர்.. ஜெயலலிதாவை திரு நாவுக்கரசர் (காங்கிரஸ் கட்சியின் இப்போதைய தமிழக தலைவர்), பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களும் ஜானகியை ஆர்.எம்.வீ உள்ளிட்ட மூத்த அமைச் சர்களும் பின்னால் இருந்து இயக்கி னார்கள். முதலில் ஜானகியின் பக்கம் இருந்த கட்சி அதிகாரம் ஒரே தேர்தலில் ஜெயலலிதாவின் தலைமைக்கு மாறியது.
அந்த நேரத்தில் ஜெயலலி தாவை தலைமை பொறுப்பிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வுகளை ‘தி இந்து’ விடம் பகிர்ந்து கொண்டார் திரு நாவுக்கரசர். இதோ அவரது கடந்த கால நினைவுகள்…
‘‘எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்த போதே கட்சிக்குள் ஜெயலலிதா அணி, ஆர்.எம்.வீ. அணி என இரண்டு கோஷ்டிகள் பட்ட வர்த்தனமாக இருந்தது. 25 அமைச் சர்கள் ஆர்.எம்.வீ. பக்கம் இருந் தார்கள். நான், பண்ருட்டி ராமச் சந்திரன், நெடுஞ்செழியன், அரங்க நாயகம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மட்டுமே ஜெயலலி தாவுக்கு ஆதரவாக இருந்தோம்.
உடல் நலக்குறைவால் அப்போ லோவில் எம்.ஜி.ஆர். அட்மிட் செய்யப்பட்டிருந்த நேரம். எம்.ஜி.ஆரை அப்போலோவிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல் லப் போகிறார்கள் என்றதுமே, ‘நீங்கள் ஒருமுறை போய் தலைவரை பார்த்துவிட்டு வந்து விடுங்கள்’ என்று நான் ஜெயலலிதாவிடம் சொன்னேன். நான்தான் அவரை அப்போ லோவிற்கு அழைத்துச் சென்றேன். ஆனால், அவர் எம்.ஜி,ஆரை பார்க்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்த போதே இங்கு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதற்கு நடுவே, ஜெயலலிதாவை ஓரங்கட்ட நினைத்தவர்கள், கட்சியின் அதி காரப்பூர்வ நாளேடான ‘அண்ணா’ வில் ஜெயலலிதாவை தாக்கி கட்டுரைகளை வெளியிட வைத் தார்கள். இதை தாங்கிக்கொள்ள முடியாத ஜெயலலிதா, ‘நமக்கும் ஒரு பத்திரிகை வேண்டும்’ என்று சொன்னதால் ‘பொன்மனம்’ பத்திரிகையை தொடங்கினேன். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியால் தொடங்கி வைக்கப்பட்ட ‘பொன்மனம்’ பத்திரிகை ஜெயலலிதாவின் கருத் துக்களை தாங்கி வந்தது.
1987 டிசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர். இறந்தபோது, மூத்தவர் என்ற அடிப்படையில் நெடுஞ்செழியன் முதல்வராக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது அவரது தலைமாட்டில் ஜெயலலிதா நின்றார். இதை விரும்பாத சிலர், அங்கேயே அவருக்கு தொல்லை கள் கொடுத்தனர். ‘என்னை ஊசியால் குத்துகிறார்கள், காலால் மிதிக்கிறார்கள்’ என்று என்னிடம் ஜெயலலிதா சொன்னார். உடனே, போலீஸ் கமிஷனர் ஸ்ரீபாலை கூப்பிட்டு ஜெயலலிதா நிற்கும் பகுதியில் பெண் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்தும்படி சொன்னேன். ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் அனுமதி இன்றி ஏற முற்பட்டார். அப்போது, ஜானகியின் அண்ணன் மகன் திலீபன், கே.பி.ராமலிங்கம் உள்ளிட் டவர்கள் அவரை ராணுவ வாகனத் திலிருந்து இறக்கி விட்டார்கள்.
ஒருவாரம் கழித்து கூட்டப் பட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஜானகியை பொதுச் செயலாள ராகவும் முதலமைச்சராகவும் தேர்வு செய்தார்கள். இதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. ஜானகியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதி முக-வும் ஜா அணி, ஜெ அணி என இரண்டுபட்டது.
1989 தேர்தலில் ஜானகி அணி படுதோல்வி கண்டது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராகவும் நான் துணை தலைவராகவும் சட்டமன்றத் திற்குள் நுழைந்தோம். வெறுத்துப் போன ஜானகி, ‘எனக்கு கட்சியும் வேண்டாம்; பதவியும் வேண்டாம்’ என அரசியலுக்கு முழுக்குப் போட்டார். அதன்பிறகு மீண்டும் அதிமுக ஒன்றானது. அதன்பிறகு ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச்செயலாளரானார் ஜெய லலிதா. அடுத்து வந்த மதுரை, மருங்காபுரி இடைத் தேர்தல் களில் அதிமுக வெற்றி வாகை சூடியது.
இதன்பிறகு, எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகிய ஜெயலலிதா அந்தப் பொறுப்பை இடைத் தேர்தலில் வென்ற எஸ்.ஆர்.ராதாவுக்கு தந்தார். இதில் எனக்கு அவரோடு மன வருத்தம். என்னை கட்சியைவிட்டு நீக்கினார் ஜெயலலிதா. நானும் 7 எம்.எல்.ஏ-க்க ளும் சேர்ந்து எம்.ஜி.ஆர். அதிமுக-வை தொடங்கினோம். 1995-ல் வளர்ப்பு மகன் திருமணம் உள்ளிட்ட செயல்களால் ஜெயலலி தாவுக்கு மீண்டும் நெருக்கடி. அவரே என்னை மீண்டும் கட்சிக்கு வரும் படி அழைத்ததால் வந்தேன்.
1996 தேர்தலில் ஜெயலலிதா பர்கூரில் தோற்றார். நான் அறந் தாங்கியில் ஜெயித்தேன். என்னை கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக்கினார். அதே சமயம், தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத அவர், ‘இனி நீங்களே கட்சியை நடத்திக் கொள்ளுங்கள் எனக்கு அரசியலே வேண்டாம்’ என்று விரக்தியுடன் சொன்னார். இப்படி பலநேரங்களில் அவர் சொல்லி இருக்கிறார். அவருக்கு தைரியம் கொடுத்து அரசியலில் நிலைக்க வைத்தோம். அதன் பிறகுதான் அரசியலின் உச்சத்தை அவர் தொட்டார்.’’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT