Published : 21 Jan 2023 06:06 AM
Last Updated : 21 Jan 2023 06:06 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள ஆலனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மனைவி மல்லிகா. இவருக்கு நேற்று முன்தினம் மதியம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேராப்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இரவு 8:30 மணி அளவில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை எவ்வித அசைவும் இன்றி இருந்ததால் இறந்து பிறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்நிலையில் கருவிலேயே தொப்புள் கொடி அறுந்துவிட்டதால் மல்லிகாவிற்கு தையல் போட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையின்போது தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு, ரத்தம் நிற்காமல் வெளியேறியதால் மயக்கமடைந்த மல்லிகாவும் பரிதாபமாக உயிரிழந்தார். தாயும்சேயும் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆரம்ப சுகாதாரநிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மருத்துவர்கள் இல்லாமலும், செவிலியர்கள் முறையான சிகிச்சை அளிக்கப் படாததுமே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்றும், மருத்துவர் இல்லாமலேயே செவிலியர்கள் தொலைபேசியில் மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து கரியாலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி விசாரணை நடத்தி வருகிறார்.
இதனிடையே, செவிலியர்கள் ராதிகா, சஞ்சம்மாள், பூங்கொடி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர் பிரசாந்த் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT